லைஃப்ஸ்டைல்
இனிய வாழ்வுக்கு இதயம் காப்போம்

இனிய வாழ்வுக்கு இதயம் காப்போம்

Published On 2021-09-29 03:37 GMT   |   Update On 2021-09-29 03:37 GMT
முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.
உலக இதய நாள் இன்று (செப்டம்பர் மாதம் - 29 ந்தேதி) கடைபிடிக்கப்படுகிறது. இதய சம்பந்தமான நோய்களான மாரடைப்பு போன்றவை தவிர்க்கப்பட வேண்டியவை மற்றும் வருமுன் காப்பது அவசியம் என்பதை பொதுமக்களிடையே உலக இதய நாள் நடைப்பயணம், ஓடுதல், இதய சிகிச்சை முகாம்கள், குறும்படங்கள், கண்காட்சிகள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

மாரடைப்பு:

இந்தியாவில் அதிகமாக ஏற்படக்கூடிய இதய நோய்களில் ஒன்று மாரடைப்பு. இதயத்தின் பகுதிகளுக்குக் குருதியோட்டம் தடைப்படும் போது இதயத்திசு இறப்பு ஏற்படுகிறது. இதற்கு காரணம் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு பொருட்கள் சேர்ந்து இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்படுகிறது.  இதனால் இதயத்தசைகளுக்கு குறைந்த அளவு குருதியே செல்வதால் இதயத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.  

இந்நிலை உள்ளவர்கள் கடினமான வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது.  இதற்கு உரிய மருத்துவம் செய்யாவிடில் இரத்த குழாய்களில் உள்ள வீக்கமானது வெடித்து குருதி உறைவு ஏற்பட்டு நிரத்தரமான அடைப்பு ஏற்பட்டு இதயத்தசைகளுக்கு குருதி செல்வது தடைப்பட்டு இதயத்தசை இறப்பு (மாரடைப்பு) ஏற்படுகிறது. முன்பெல்லாம் 60 முதல் 80 வயதுள்ளவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு ஏற்படும். ஆனால் அது 40 ஆகக் குறைந்து தற்போது 20-25 வயதுள்ள ஆண், பெண்களுக்கு மாரடைப்பு ஏற்படுகிறது.

இருதய நோய் வராமல் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள்:

5 மணி நேரங்களுக்கு மேல் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடி வேலை செய்வதை குறைக்கவும்.  அடிக்கடி 5-10 நிமிடங்களாவது இடைஇடையே நடந்து செல்லவும்.

மது, புகையிலை அருந்துவதைத் தவிர்க்கவும்.

கோபம் அடிக்கடி வருவதை தவிர்க்கவும்.  கோபமானது இதய நோய் வருவதை இரட்டிப்பாக்கும்.

உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

குறைந்தது 8 - 9 மணி நேரமாவது தூங்க வேண்டும். தூக்கமின்மை மன இறுக்கத்தை உண்டாக்கும்.

சர்க்கரை நோயாளிகள், உயர்இரத்த அழுத்தம் உள்ளவர்கள், அதிக கொலஸ்டிரால் உள்ளவர்கள் அவற்றின் அளவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். 38 சதவீத இதய இரத்தக்குழாய் சம்பந்தமான வியாதியுள்ளவர்களுக்கு பல் ஈறுகளில் நோய்த்தொற்று இருப்பதாக மருத்துவ ஆய்வு அறிக்கை கூறுகிறது.

வருடத்திற்கு ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

அதிக எடையுள்ள கனமான பொருட்களை தூக்க கூடாது. குனிந்தபடி அதிக நேரம் வேலை செய்தல் போன்றவற்றை செய்யும் போது இதயத்திற்கு சுமையை அதிகரிக்கச் செய்யும்.

உணவு முறைகள்:

40 வயதைக் கடந்த அனைவரும் சரியான சமச்சீர் உணவுகளை உண்பது இதய பாதுகாப்பிற்கு மிகவும் நல்லது. உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் சேர்த்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளவும்.

மாதுளம்பழம், பப்பாளி, அன்னாசி போன்ற பழங்கள் இதய இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கும். பெரியநெல்லிக்காய் ஒன்றினை வாரத்திற்கு இரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும்.

உணவில் நார்ச்சத்துகள் உள்ள உணவினை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். முளைக்கட்டிய தானிய வகைகளை எடுத்துக் கொள்ளவும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்:

உணவில் உப்பின் அளவினைக் குறைத்துக் கொள்ளவும்.

கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்புச்சத்துகள் அதிகம் உள்ள உணவினை உண்பதை குறைக்கவும்.

உடலுக்குத் தேவையான அளவை விட அதிக அளவு உண்பதை குறைத்துக் கொள்ளவும்.

முந்திரி, பாதாம் போன்ற பருப்பு வகைகள் உண்பதை தவிர்க்கவும்.

எண்ணெயில் பொரித்த உணவுகள் உண்பதை தவிர்க்கவும்.

பெரும்பாலும், அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இனிப்புப் பண்டங்கள் அடிக்கடி அதிகளவில் உண்பதை தவிர்க்கவும்.

அப்பளம், ஊறுகாய் போன்றவற்றை அதிகளவில் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

உருளைக்கிழங்கு, வாழைக்காய், மொச்சை, பட்டாணி, காராமணி, முட்டையின் மஞ்சள் கரு போன்றவற்றை வாதத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

பாலிலிருந்து கிடைக்கக்கூடிய பாலாடைகட்டி, சீஸ், கோவா போன்றவற்றை தவிர்க்கவும்.

உடற்பயிற்சி:

ஒரு நாளைக்கு 30 நிமிடமாவது நடக்க வேண்டும். உடற்பயிற்சி செய்வது இதயத்தின் செயல்திறனை அதிகப்படுத்தி இரத்த குழாய்களை விரிவடையச்செய்யும்.
சைக்கிள் பயிற்சி, நீச்சல் பயிற்சி, 30 நிமிடம் செய்வதன் மூலம் இதயமானது வலுப்பெறும். மாடிப்படி 15 நிமிடமாவது ஏறி இறங்கலாம்.

மேற்கூறிய உடற்பயிற்சியை Ejection Fraction அதாவது இதயம் தனக்கு வரும் ரத்தத்தில் குறைந்தது 60--70 சதவீதம் வெளித்தள்ள வேண்டும்.  EF-50 சதவீதம் மேல் இருந்தால் வேகமான நடைபெயற்சி செய்யலாம்.  EF-40 சதவீதம் குறைவாக இருப்பவர்கள் எந்த உடற்பயிற்சியும், நடைப்பயிற்சியும் செய்யக் கூடாது.

இதயத்தை பலமாக்கும் யோகாசனங்கள்:

விருஷாசனம் (மரம் போன்ற நிலை)
திரிகோணாசனம்
புஜங்காசனம்
உத்கடாசனம்

போன்ற யோகாசனங்களை மருத்துவரை அணுகி அவரது ஆலோசனைப்படி செய்து வந்தால் மாரடைப்பு, இதயப்படபடப்பு போன்றவற்றிற்கு காரணமான உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மார்பு பகுதியை விரிவடையச் செய்து ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தினை இதயத்திற்கு சீராக எடுத்துச் செல்ல உதவுகிறது.

Tags:    

Similar News