லைஃப்ஸ்டைல்
கீன்வா, சியா

அதிக ஊட்டச்சத்து கொண்ட கீன்வா, சியா

Published On 2021-09-24 08:09 GMT   |   Update On 2021-09-24 08:09 GMT
அதிக ஊட்டச்சத்து கொண்ட கீன்வா, சியாவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.
கீன்வா, சியா விதைகள் அதிக ஊட்டச்சத்து கொண்ட தானியங்கள். கீன்வா தானியத்தில் 14 சதவீதம் புரதம் செறிந்திருக்கிறது. ஐ.நா. சபை 2013-ம் ஆண்டை கீன்வாவை பிரபலப்படுத்தும் ஆண்டாக அறிவித்தது. கீன்வா, தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. அங்கிருந்து, ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா, அமெரிக்காவுக்கு பரவியது.

சியா தானியம் மெக்சிகோ, தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இதில், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளன. நார்ச்சத்து 40 சதவீதத்துக்கும் அதிகம்.

இந்திய சியா விதைகள் வெள்ளை நிறம் கொண்டவை. இப்பயிர் வறட்சியை தாங்கி வளரும். ராமநாதபுரம் மாவட்டத்திலேயே நன்கு வளரக்கூடியது என்பதால், அனைத்து வகை மண்ணிலும் சாகுபடி செய்ய முடியும். குறைந்த அளவு நீர் இருந்தால் போதுமானது. அதாவது, நெல் சாகுபடிக்கு தேவைப்படும் நீரில் 5-ல் ஒரு பங்கும், கோதுமைக்கு தேவைப்படும் நீரில் இரண்டில் ஒரு பங்கும் இருந்தாலே போதும். இரு முறை நன்கு உழவு செய்து, சமன்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடலாம். போதுமான ஈரப்பதம் இருந்தால் 24 மணி நேரத்தில் முளைவிட்டு, ஒரு வாரத்துக்குள் இலைகள் துளிர்க்கும். பூச்சிகள் தென்பட்டால், வேப்ப எண்ணெய், சோப்பு நீர் கலந்து தெளித்தால் போதுமானது.

ஆரம்ப கட்டத்தில் களை நீக்கம் வேண்டியிருக்கும். விதைக்கப்பட்ட 90 நாள் முதல் 120 நாட்களுக்குள் அறுவடைக்கு தயாராகிவிடும். அறுவடை நேரத்தில் மழை இல்லாமல் இருப்பது நல்லது. தானியம் முற்றிய பின் மழை பெய்தால் ஈரம் பட்ட 24 மணி நேரத்தில் முளைத்து விடும் ஆபத்தும் உண்டு. ஏக்கருக்கு 500 முதல் 700 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

சியா, குளிர்கால சாகுபடிக்கு ஏற்றது. அரை அடி உயரத்துக்கு பாத்திகள் அமைத்து நாற்றங்கால் தயார் செய்ய வேண்டும். 100 கிராம் விதையை அதே அளவு மணலுடன் கலந்து சீராக விதைக்க வேண்டும். விதைகளை மணல், மண்புழு உரம் கலந்த கலவையைக் கொண்டு மூட வேண்டும். உடனடியாக நீர் பாய்ச்சி ஈரப்பதத்தை தொடர்ந்து பேண வேண்டும். 21 நாட்களில் நாற்று தயாராகிவிடும். நன்கு உழவு செய்யப்பட்ட நிலத்தில், இரண்டு அடிக்கு ஓர் அடி என்ற இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். 7-10 நாட்கள் இடைவெளியில் நீர்ப்பாய்ச்சி ஈரப்பதத்தை பேண வேண்டும். பூச்சி தாக்குதல் இருக்காது. களையின் அளவை, பொறுத்து, 2 அல்லது 3 முறை களையெடுக்க வேண்டும். ஏக்கருக்கு 350 முதல் 400 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.

இந்த இரு தானியங்களுக்கும் சந்தையில் அதிக தேவை உள்ளது. ஒவ்வொரு முறையும் விதை வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அறுவடை செய்த தானியத்தை எடுத்து வைத்து, மறுமுறை பயன்படுத்தலாம். இதனால் சக விவசாயிகளிடம் இருந்தே விதை கிடைக்கும். நெல் போன்று அரவை செய்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. நேரடியாக உணவாகப் பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு இதன் உணவை கொடுப்பதன் மூலம் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகளையும் தவிர்க்க முடியும்.
Tags:    

Similar News