லைஃப்ஸ்டைல்
நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறிகள்

நகங்களில் தென்படும் நோய் பாதிப்பு அறிகுறிகள்

Published On 2021-09-11 06:16 GMT   |   Update On 2021-09-11 09:01 GMT
தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும்.
முகம், கண்கள், நாக்கு போன்றவைகளை பார்த்து அவருக்கு உடலில் எத்தகைய பாதிப்புகள் இருக்கின்றன என்பதை அனுபவ டாக்டர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். அதுபோல் நகங்களும் உடல் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன. நகங்கள் வெளிப்படுத்தும் நோய் அறிகுறிகளை காண்போம்!

நகங்களின் நடுப்பகுதியில் வெள்ளை நிறத்தில் புள்ளிகளும், திட்டுகளும் காணப்பட்டால் அவை நோய்த்தொற்றின் அறிகுறியாக இருக்கும். அதனால் அவர்கள் உடல்நலத்தில் அக்கறைகாட்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.

மஞ்சள் நிறம் மற்றும் வெளிறிய நிறத்தில் ஒருசிலரின் நகங்கள் காட்சியளிக்கும். பெரும்பாலும் வயதானவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக தென்படும். புகைபிடித்தல், நீரிழிவு நோய், சுவாச நோய் போன்ற பாதிப்புக்களின் அறிகுறியாக இதனை உணரலாம்.

சிலருக்கு நகங்களின் நடுப்பகுதியில் குழி விழுந்து காணப்படும். அழுத்தமான கோடுகள் போன்றும் பதிந்திருக்கும். இது ஒருவகை திசுக்கோளாறுகளால் ஏற்படும் பாதிப்பாகும். இப்படிப்பட்டவர்களுக்கு தோல் அழற்சி பிரச்சினையும் இருக்கலாம்.

நகம் வெடித்து காணப்பட்டால், நகப்பூச்சு ஒத்துக்கொள்ளவில்லை என்று கருதலாம். ஆனால் வெடித்து நகங்கள் பிசிறுபோல் உதிர்ந்துகொண்டிருந்தால் இரும்பு சத்து குறைபாடு இருப்பதாக அர்த்தம். உடனே பரிசோதிக்க வேண்டியது அவசியம்.

நகங்களில் சிலருக்கு நீள்வாக்கிலும், பக்கவாட்டிலும் வரிசையாக கோடுகள் காணப்படும். நகத்தின் நிறமும் மாறுபட தொடங்கியிருக்கும். அது சிறுநீரக நோய் பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். சோர்வு, கவலை எடை இழப்பு, நீரிழிவு, சிறுநீர் அதிகமாக வெளியேறுவது போன்ற பாதிப்புகளும் அவர்களுக்கு இருக்கலாம்.

சிலருக்கு நகங்கள் வலுவே இல்லாமல் உடைந்துபோய் கொண்டிருக்கும். அது உடல்நலப்பிரச்சினைக்கான ஆரம்பகட்ட அறிகுறியாகும். தண்ணீரில் நனைத்தாலோ, சருமம் வறட்சியாக இருந்தாலோ நகங்கள் உடைவது தொடர்ந்து கொண்டிருக்கும். சோர்வு, சரும பொலிவின்மை போன்ற அறிகுறிகள் உருவாகும். இந்த பிரச்சினையை கட்டுப்படுத்த வைட்டமின் சத்துக்களைகொண்ட உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

நகங்களில் கருமை படிந்திருந்தாலோ, நகங்களை சுற்றி ரத்தக்கட்டு தோன்றியிருந்தாலோ, அது புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். உடனே மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
Tags:    

Similar News