லைஃப்ஸ்டைல்
புகையிலை இல்லாத உலகம் படைப்போம்

புகையிலை இல்லாத உலகம் படைப்போம்

Published On 2020-07-26 04:30 GMT   |   Update On 2020-07-25 07:58 GMT
புகைப்பழக்கமே இல்லாத 9 லட்சம் அப்பாவிகளும் அடக்கம்(பெண்கள் குழந்தைகள் உள்பட). புகையிலை உபயோகம் மற்றும் புகைப்பழக்கம் மனிதன் மரணிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.
உலக சுகாதார நிறுவனம் 1987-ம் ஆண்டு முதல் மே 31-ந் தேதியை உலக புகையிலை எதிர்ப்பு நாளாக அனுசரித்து வருகிறது. ஒரு நாள் முழுவதும் அனைத்து வகையான புகையிலை பயன்பாட்டை நிறுத்திவைப்பது மற்றும் புகையிலை உபயோகிப்பதனால் ஏற்படும் உடல் நலக்கேடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த தினத்தின் நோக்கமாகும்.புகையிலை உபயோகிப்பதனால் ஆண்டுதோறும் உலகளவில் 70 லட்சம் பேர் மரணம் அடைகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதில் புகைப்பழக்கமே இல்லாத 9 லட்சம் அப்பாவிகளும் அடக்கம்(பெண்கள் குழந்தைகள் உள்பட). புகையிலை உபயோகம் மற்றும் புகைப்பழக்கம் மனிதன் மரணிப்பதற்கான முக்கிய காரணமாக உள்ளது.

இருபதாம் நூற்றாண்டில் சுமார் 10 கோடி பேர் புகையிலை உபயோகித்ததால் மரணம் அடைந்தனர். 21 -ம் நூற்றாண்டில் புகையிலை பழக்கத்தினால் சுமார் 100 கோடி பேர் இறக்கக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர். புகையிலையை எந்த ரூபத்தில் பயன்படுத்தினாலும் அது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்க கூடியது. இதில் புகைப்பிடிக்கும் பழக்கம் மிக மோசமான விளைவுகளை உண்டாக்கக்கூடியது. புகைப்பழக்கம் புகைப்பிடிப்பவரையும் கூடவே இருக்கும் புகைப்பிடிக்காதவரையும் ஒருங்கே பாதிக்கக்கூடியது.

இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சுமார் 40 சதவீத ஆண்களும் 5 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் 25 சதவீத ஆண்களும் 15 சதவீத பெண்களும் புகைப்பிடிப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

வளர்ந்த நாடுகளில் புகைப்பழக்கம் குறைந்துவிட்ட நிலையில் வளரும் நாடுகளில் புகைப்பழக்கம் அது தொடர்பான வியாதிகளும் அதிகரித்துள்ளன. பள்ளி கல்லூரி காலங்களில் நண்பர்களின் ஊக்கத்தாலேயே புகைப்பிடிக்க ஆரம்பித்ததாக பெரும்பாலான புகைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர். மன அமைதிக்காகவும் மலச்சிக்கலை தவிர்ப்பதற்கும் புகை பிடிப்பதாக பலர் சொல்கின்றனர். புகையிலையில் உள்ள நிகோடின் என்ற வேதிப்பொருள் நமது நரம்புமண்டலத்தில் வேலை செய்து திரும்ப திரும்ப புகைப்பிடிக்க தூண்டுகிறது. புகையிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேதிப்பொருட்கள் உள்ளன. இவற்றில் 72 வேதிப்பொருட்கள் கண்டிப்பாக புற்றுநோயை உண்டாக்கக் கூடியது. புகைப்பழக்கம் மூலம் 13 வகையான புற்றுநோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. புகையிலை பான் குட்கா போன்றவற்றை பயன்படுத்துவதன் மூலம் வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. புகைப்பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட 15 மடங்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் 3-ல் 2 பேர் புகைப்பழக்கத்திற்கு ஆளானவர்கள். புகைப்பழக்கம் மூலம் ஏற்படும் மாரடைப்பு மரணத்தை ஏற்படுத்துவதில் முதலிடத்தில் உள்ளது.

புகைப்பிடித்தல் பல வழிகளில் நமது நுரையீரலை பாதிக்கிறது. நுரையீரல் தொற்று ஆஸ்துமாவில் ஆரம்பித்து நுரையீரல் புற்றுநோய் வரை அதில் அடங்கும். இரண்டாம் தர புகைத்தல் என்பது புகைப்பழக்கம் அல்லாத ஒருவர் புகைக்கு உட்படுவதால் ஏற்படுவதாகும். குழந்தைகள் பெண்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். பொது இடங்கள் மற்றும் வேலை செய்யும் இடங்களில் புகைப்பிடிப்பவர்களால் மற்றவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஆண்டுதோறும் 9 லட்சம் பேர் இறந்துபோகின்றனர்.

உலகளவில் ஆண்டுதோறும் 1.5 லட்சம் குழந்தைகள் வீட்டிலுள்ள பெரியவர்கள் புகைப்பிடிப்பதால் இறந்துபோகிறார்கள். கருவில் இருக்கும் குழந்தையையும் புகைப்பழக்கம் விட்டு வைக்காது. புகைப்பிடிக்கும் தாய் அல்லது தந்தையின் மூலம் சிசுவின் நுரையீரல் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் இந்த குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் நுரையீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். புகைப்பிடிப்பதை நிறுத்த வேண்டும் என்ற மனஉறுதி இருந்தால் மட்டுமே புகைப்பதை நிறுத்த இயலும். நிகோடின் சிகிச்சையின் மூலமும் பயன்பெறலாம்.

2030-ம் ஆண்டுக்குள் தொற்றா நோய்களின் மூலம் ஏற்படும் மரணங்களை மூன்றில் ஒரு பங்காவது குறைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. புகைப் பிடிக்கும் பழக்கத்தையும் புகையிலை உபயோகத்தையும் கட்டுப்படுத்தாமல் இது சாத்தியமில்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் புகைப்பிடிப்பதன் தீமைகளை தெளிவாக எடுத்துக்கூற வேண்டும். புகைப்பிடிப்பவராயின் முதலில் தாம் புகைப்பிடிப்பதை நிறுத்தி முன் உதாரணமாக திகழ வேண்டும். புகைப்பழக்கத்தையும் புகையிலை உபயோகத்தையும் கட்டுப்படுத்தி புகையில்லா (நோயில்லா) உலகத்தை ஏற்படுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

டாக்டர் செந்தில்குமார்

புற்றுநோய் சிகிச்சை நிபுணர் உதவி பேராசிரியர் தஞ்சை மருத்துவ கல்லூரி.
Tags:    

Similar News