லைஃப்ஸ்டைல்
நோய்களை விரட்டும் தடுப்பூசி

நோய்களை விரட்டும் தடுப்பூசி

Published On 2020-07-24 09:32 GMT   |   Update On 2020-07-24 09:32 GMT
இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். நோய்களை வரவிடாமல் தடுக்கும் தடுப்புமருந்துகளின் வரலாற்றை அறிவோமா....
இன்று கொரோனாவோடு உலகம் போராடிக் கொண்டிருக்கிறது. யாராவது மருந்து கண்டுபிடித்துவிட மாட்டார்களா? என்று மக்கள் ஏங்குகிறார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த நோயை வரவிடாமல் தடுத்துவிடும் தடுப்புமருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும், உலகம் முடக்கத்தில் இருந்து மீண்டு, எப்போது புத்துணர்ச்சியுடன் இயங்க ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பும் எல்லோரிடமும் உள்ளது. அதுசரி, நோய்களை வரவிடாமல் தடுக்கும் தடுப்புமருந்துகளின் வரலாற்றை அறிவோமா....

தடுப்பூசி அல்லது தடுப்பு மருந்து என்பது மனிதன் அல்லது ஒரு விலங்கிற்கு குறிப்பிட்ட நோய்க்கு எதிர்ப்பு சக்தியை வழங்குவதற்காக செலுத்தப்படும் மருந்தாகும்.

தடுப்பு மருந்தானது உடலினுள் சென்று, நமது உடலின் நோய்த்தடுப்பு மண்டலத்திற்கு புதிய நோயை உருவாக்கும் கிருமிகளை அறிமுகம் செய்து அவை எதிர்காலத்தில் உடம்பை தாக்காதவண்ணம் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது.

தடுப்புமருந்துகள் ஊசி மூமாகவோ, வாய் வழி உட்கொள்ளும் மருந்தாகவோ, மூக்கின் வழியே சுவாசிக்கும் வகையில் செலுத்தப்படுவதாகவோ உள்ளது.

உலகின் முதல் தடுப்புமருந்து பெரியம்மை நோய்க்காக உருவாக்கப்பட்டது. எட்வர்டு ஜென்னர் என்னும் ஆங்கிலேய மருத்துவர் 1796-ல் இந்த தடுப்புமருந்தை உருவாக்கினார். அது பெரியம்மை நோயை உலகைவிட்டே இன்று விரட்டிவிட்டது. 1980-ல் உலகம் முழுவதும் பெரியம்மை வைரஸ் நோய் ஒடுக்கப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

தடுப்பு மருந்தால் உலகில் ஆண்டுதோறும் 25 லட்சம் இறப்புகள் தடுக்கப்படுவதாக மதிப்பீடு செய்து அறிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

19-ம் நூற்றாண்டில் பிளேக், காலரா, ரேபிஸ், டெட்டனஸ் மற்றும் டைபாய்டு போன்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டன. இந்த நோய்களின் தாக்கமும் தற்காலத்தில் வெகுவாக குறைந்துள்ளது.

20-ம் நூற்றாண்டு வரை 27 தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. 20-ம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய தடுப்பூசிகளின் வகை பின்வருமாறு: காசநோய், தட்டம்மை, புளூ காய்ச்சல், நிமோனியா காய்ச்சல் மற்றும் ஈரல் அழற்சிகள்.

2019-ல் மேலும் 6 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்தன. அவை மனித பாப்பிலோமா வைரஸ், ஈரல் அழற்சி-இ வகை, என்டோ வைரஸ் 71, மலேரியா, டெங்கு மற்றும் எபோலா.

ஒவ்வொரு நாட்டின் நோய்த்தடுப்புத் துறையானது குறிப்பிட்ட தடுப்பூசிகளை கட்டாயப்படுத்தி தங்கள் குடிமக்களின் ஆரோக்கியத்தை பேணி வருகிறது. சில தடுப்பூசிகள் வாழ்நாளில் ஒரு முறையும், சில தடுப்பூசிகள் குறிப்பிட்ட இடைவெளியிலும் போடப்பட வேண்டும். இன்னும் சில தடுப்பூசிகள் ஆண்டுதோறும் போட வேண்டிய அவசியம் உள்ளது. புளூ காய்ச்சல் தடுப்பூசி ஆண்டுதோறும் போட வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் புளூகாய்ச்சல் நவம்பர் முதல் சில மாதங்களில் பரவும். அந்தக் காலத்திற்கு முன்பு சிறு குழந்தைகள் முதல் இந்த தடுப்பூசியை ஆண்டுதோறும் போடுகிறார்கள்.

போலியோ தடுப்பூசி மூலம் போலியோ பாதிப்பையும் பெருமளவு கட்டுப்படுத்திவிட்டோம். சுகாதாரத் துறை மோசமாக உள்ள சில நாடுகளில் மட்டும் அரிதாக போலியோ பாதிப்பு தென்படுகிறது.

தடுப்பூசிகளை பரவலாக்குவதன் மூலம், மந்தை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. அதாவது பெரும் பாலானவர்கள் தடுப்பூசி போட்டிருந்தால், தடுப்பூசி போடாத சிலருக்கும் நோய் பரவுவது தடுக்கப்படுகிறது. ஏனெனில் நோய் பரவ சிறுபான்மை அளவிலேயே வாய்ப்புள்ளதால் அந்த நோய் பரவாமல் அடங்கிவிடுகிறது.

தற்போது கொரோனா பாதிப்பிலும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியே மற்றவர்களை காக்க பயன்படும் என்று பல மருத்துவர்கள் கூறி உள்ளனர். நோய் பாதிப்பு வேகமாக பெருகி அடங்கிவிட்டால் அந்த நோய் மற்றவர்களிடம் பரவாமல் ஒடுங்கிவிடும் என்று நம்பப்படுகிறது.


Tags:    

Similar News