பெண்கள் உலகம்

உணவுகளை தாளித்து சாப்பிடுவது ஏன் தெரியுமா?

Published On 2019-05-06 08:46 IST   |   Update On 2019-05-06 08:46:00 IST
உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா? சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்லும்.
உணவை நாம் ஏன் சமைத்து சாப்பிடுகிறோம் தெரியுமா? சமைத்து சாப்பிடும்போது, உணவில் உள்ள பல்வேறு சுவைகள் மற்றும் உணவு பொருள்களில் உள்ள மூலக்கூறுகள் ஒன்றுடன் ஒன்று கலந்து நமது உடலுக்குள் செல்லும். அப்படி கலந்து செல்வதால் உணவில் ஏற்படும் மாறுபாடுகளால் அஜீரணம் தோன்றலாம். முரண்பாடான உணவுச் சேர்க்கையால் உடலுக்கு ஒத்துக்கொள்ளாமலும் போகலாம்.

அப்படி ஆகக்கூடாது என்பதற்காகத்தான், உணவை சமைக்கும்போது உணவின் சுவைக்கு ஏற்பவும் அதன் குணத்திற்கு ஏற்பவும் சில நறுமணப்பொருள்களை அதில் சேர்க்கும் வழக்கம் ஏற்பட்டது. அந்த நறுமண பொருட்கள் உணவிற்கு சுவையை அளிப்பதுடன் எளிதில் ஜீரணமாகவும் உதவுகிறது. சத்துக்களை உடலில் எளிதில் கொண்டுபோய் சேர்க்கிறது, ஒவ்வாமை ஏற்படாமல் காக்கின்றது.

அதற்காக ஏலக்காய், மஞ்சள், சீரகம், பெருங்காயம், சுக்கு, வெந்தயம், பூண்டு, மிளகு ஆகிய எட்டு பொருட்களை குறிப்பிடத்தக்கவிதத்தில் சேர்க்கிறோம். இவைகளை உணவின் குணத்திற்கும், சுவைக்கும் ஏற்ப சேர்த்து சமைத்து உண்டால், உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தன்மையும் சமச்சீராகும். அதனால் அவை திரிதோட சமநிலை பொருள்கள் என்று அழைக்கப்படுகிறது.

அதனை விளக்கும் விதத்தில்...

ஒன்றிய வாத பித்த கபமியையுராவண்ணம்

நன்று கறிகனெல்லா நாளுமே சமைப்பராய்தோர்

தின்று மிளகு மஞ்சள் சீரக முயர்ந்த காயம்

வெற்றிகொள்ள சுக்கோடேலம் வெந்தயம் முள்ளி சேர்த்தே!

- என்ற பாடல் பதார்த்த குணசிந்தாமணியில் இடம்பெற்றுள்ளது.

மேற்கண்ட நறுமண பொருள்கள் அனைத்தும் சிறிது கார சுவை உடையவை. ஜீரணத்தை எளிதாக்குவதுடன் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நுண் கொல்லிகளையும் அழிக்கும். உணவில் உள்ள நஞ்சுத்தன்மையை நீக்கும்.

இனிப்பு உணவுகளை சமைக்கும்போது நெய் சேர்க்கிறோம். அது சிலருக்கு அஜீரணக் கோளாறை உண்டாகும். மேலும் இனிப்பு சுவை கப தன்மையை அதிகப்படுத்தும். ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, ஜாதிக்காய், ஜாதிபத்திரி, குங்குமப்பூ போன்ற ஏதாவது ஒருசில நறு மணப்பொருட்களை அந்த உணவில் அதன் சுவைக்கு ஏற்ப சேர்த்தால், கப தன்மை குறையும். முக்கியமாக ரத்தத்தில் சர்க்கரையை சற்று தாமதமாக கலக்க செய்யும். ஏலக்காய் மற்றும் ஜாதிக்காயில் உள்ள நறுமண வேதிப்பொருட்கள் குடல் புண்களை ஆற்றும் சக்தி வாய்ந்தவை. குடல் புழுக்களையும் அழிக்கும் ஆற்றல்கொண்டது.

அசைவ உணவு சமைக்கும்போது பூண்டு, இஞ்சி, மிளகு, மஞ்சள் இவற்றை கலந்து சமைப்பது மிகச்சிறந்த முறை. மிளகு சிறந்த கிருமி நாசினி. உணவில் உள்ள நச்சுக்களை நீக்கும் சக்தி மிளகிற்கு உண்டு. பூண்டு, இதயத்திற்கு மிக சிறந்த உணவு. ரத்தத்தில் கொழுப்பை சேரவிடாமல் காக்கும். நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றலும் பூண்டிற்கு உண்டு.

பருப்பு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, சுண்டல் போன்றவற்றை தயார்செய்யும்போது மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காயம் போன்றவற்றை சேர்த்து பயன்படுத்த வேண்டும். அவை உணவிற்கு தனி ருசியை அளிப்பதுடன், வாதம் அதி கரிப்பதால் உடலில் ஏற்படும் வலியையும் நீக்கும்.

நாம் சாப்பிடும் உணவில் ரசம் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது. மிளகு, சீரகம், பூண்டு, தனியா, மஞ்சள், பெருங்காயம், கொத்தமல்லிக் கீரை, கறிவேப்பிலை போன்றவை ரசத்தில் சேரும் பொருட்கள். உணவின் இடையில் நாம் ரசம் சாப்பிடு கிறோம். இது இரைப்பையில் உள்ள ஜீரண நீரினை சுரக்கச்செய்து ஜீரணத்தை எளிதாக்கி வாத, பித்த, கபத்தை சமநிலைப்படுத்துகிறது. சீரகம், காரம் மற்றும் இனிப்பு சுவையையும், குளிர்ச்சித்தன்மையையும் கொண்டது. உடல் வெப்பத்தை சீராக வைத்திருக்கும். பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை, நெஞ்சு எரிச்சல் ஆகியவற்றை தீர்க்கவல்லது.

குழம்பு மற்றும் சாம்பார் வகைகளை தயார் செய்யும்போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்க்கவேண்டும். வெந்தயம் கசப்பு சுவை உடையது. புளிப்பால் உண்டாகும் வாதத்தை குறைக்கும். பித்தத்தை தணிக்கும். நார்ச்சத்து நிறைந்த மருத்துவ உணவு இது.

காய்கறி மற்றும் கீரைகள் சமைக்கும்போது அரை தேக்கரண்டி மஞ்சள்தூள் சேர்த்துக் கொள்ளவேண்டும் மஞ்சள் மிகச் சிறந்த கிருமி நாசினி. புண்களை ஆற்றும் தன்மை இதற்கு உண்டு. வலி, வீக்கங்களை குறைக்கும். புற்றுநோய் வராமல் தடுக்கும். உடல் மற்றும் மூளை செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியையும் தரும்.

தொண்டைக்கட்டு, குரல்பிடித்தம் ஏற்படுதல், தலைவலி, அஜீரணம், பசியின்மை, வயிற்றுப் பொருமல், வாயு தொல்லைகளுக்கு, காரச்சுவை உடைய சுக்கு மற்றும் இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். பெருங்காயம் கசப்பு, காரச்சுவையையும், வெப்பத்தன்மையையும் கொண்டது.

உப்பு, காரம், புளிப்புச்சுவை கொண்ட உணவுகளை சமைக்கும்போதும், கிழங்கு வகை உணவுகளை சமைக்கும்போதும் கட்டாயம் பெருங்காயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். அஜீரணம் காரணமாகத் தோன்றும் நெஞ்சுவலி, சாப்பிட உடன் மலம் வரும் உணர்வு, குடல் அழற்சி நோய்களுக்கு பெருங்காயம் மிகச் சிறந்த மருந்து. தொற்று நோய்களை தடுக்கும். பெருங்காயத்தை சிறிது எண்ணெய்யில் பொரித்து உணவில் சேர்க்க வேண்டும்.

உணவில் காரச் சுவைக்காக மிளகாயை பயன் படுத்துகிறோம். இது வெப்ப வகை உணவு. அதனால் வயிற்றுக் கடுப்பு, வயிற்றுப்புண், மூலம் முதலிய நோய்கள் உண்டாகலாம். மிளகாயின் வெப்பத்தை குறைக்க அதற்கு சம அளவு கொத்தமல்லி விதையை( தனியா) கலந்து பயன்படுத்தவேண்டும். பச்சைமிளகாயை பயன்படுத்தும்போது, கொத்தமல்லி கீரையை சம அளவு சேர்த்துக் கொள்வது நல்லது.

உணவுப் பொருட்களை நாம் ஏன் தாளிக்கிறோம் தெரியுமா?

உணவு பொருட்களில் உள்ள சில வைட்டமின்கள் நீரில் கரையும் தன்மை உள்ளவை. சில கொழுப்பில் கரையும் தன்மை வாய்ந்தவை. உதாரணமாக கேரட், கீரைகளில் உள்ள வைட்டமின்கள் கொழுப்பில் கரையும். இவ்வகை உணவுகளை தாளிக்கும்போது, சிறிது எண்ணெய்யுடன் கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, காயம் போன்ற பொருட்களை சேர்க்கவேண்டும். அவைகளை சேர்த்து தாளிக்கும்போது, அதில் உள்ள நறுமண பொருட்கள் வெளிப்பட்டு எண்ணெய்யுடன் கலக்கும். அதை நாம் சாப்பிட்டால், உணவில் உள்ள வைட்டமின்கள் எளிதாக உடலில் சேரும். குழம்பு மற்றும் சாம்பாருக்கு கடுகுடன் வெந்தயம், பெருங் காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். அதுபோல ரசத்திற்கு கடுகு, பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை தாளித்து பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்தால், அந்த உணவுகளை உண்ணும்போது அதிக ருசி கிடைக்கும். சத்துக்களும் உடலில் சேரும்.

தொடரும்.

கட்டுரை: டாக்டர் இரா.பத்மபிரியா, சித்த மருத்துவர், சென்னை. 

Similar News