லைஃப்ஸ்டைல்

அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்

Published On 2018-02-18 08:57 GMT   |   Update On 2018-02-18 08:57 GMT
மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.
பொதுவாக, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கு கடல் உணவுகளான இறால், நண்டு, கருவாடு ஆகியவை ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தும். சிலருக்குப் பால், நட்ஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் பாலுக்குப் பதிலாக தயிர், மோர், சோயா பால் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், தானியங்களை பொறுத்தவரை ஒருவருக்கு எது சேர்கிறதோ அதை உணவாக உட்கொள்ளலாம்.

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். நாம் பயன்படுத்தும் தலையணை உறைகள், போர்வைகளில் நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் வளர்ந்து தொல்லை தரும். அலர்ஜி உள்ளவர்கள் பாதிப்பிலிருந்து மீட்கும் ‘டஸ்ட் மைட் பில்லோ கவர்ஸ்‘ பயன்படுத்தலாம். ஈரப்பதமுள்ள சுவர்களில் பூஞ்சை பிடித்து அதனாலும் ஒவ்வாமை ஏற்படும்.

சிமெண்டு தொழிற்சாலை, பீடிசுற்றும் தொழில், பஞ்சு ஆலைகள், மிளகாய் மண்டிகள் போன்ற தொழில் செய்யும் இடங்களிலும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஏ.சி. அறைகளில் நீண்டநேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் பிரச்சினைகள் வரும்.

வாகனப்புகை, சிகரெட் புகை, காற்றில் பரவும் தூசு போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்படும். பயணத்தின்போது குறைந்தபட்சம் துணியால் மூக்கை மறைத்துக்கொள்வது நல்லது. சில பூக்களின் மகரந்தங்கள், ஒரு சில வாசனை திரவியங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.



குளிர்ந்த காற்று, மன அழுத்தம், சொத்தைப்பல், குடற்புழுக்கள், சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்றவற்றாலும்கூட சைனஸ் பாதிப்பு ஏற்படலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், மூக்கில் அரிப்பு, அடிக்கடி சளி பிடிப்பது ஆகியவை சைனசின் அறிகுறிகளாகும். சைனஸ் வந்தவர்களுக்கு தலைவலி, மயக்கம், இருமல், உணவின் வாசனை-சுவை அறியாமல் போவது, தொடர்ச்சியான காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். சிகிச்சை எடுக்காவிட்டால் ஆஸ்துமாவாக மாறக்கூடும்.

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக கைவிடவேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை வாரம் ஒருமுறை வெந்நீரில் அலசி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. அவற்றின் அசுத்தங்கள், முடிகள் காற்றில் பறந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். வீட்டில் கரப்பான் பூச்சி, கொசு போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கொசுவர்த்திச்சுருள், மேட்ஸ், லிக்யூட் என்று எந்த கொசுவிரட்டியையும் பயன்படுத்தக் கூடாது. கொசுவர்த்திச்சுருளில் இருக்கும் பைரித்தான் என்னும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. பஞ்சு, சணல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது. இளஞ்சூடான நீரில் குளிப்பது நல்லது. கொதிக்கவைத்து ஆறவைத்த நீரைப் பருக வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சூடாகச் சாப்பிடுவது நல்லது.
Tags:    

Similar News