லைஃப்ஸ்டைல்

செல்லப்பிராணிகள் வளர்ப்பில் கவனம் தேவை

Published On 2016-10-20 02:15 GMT   |   Update On 2016-10-20 02:15 GMT
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன.
வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அந்த வீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராகவே மாறிவிட்டிருக்கின்றன. குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களைக் காட்டிலும் செல்லப்பிராணிகளுக்காக ஒதுக்கப்படும் நேரமும் காட்டப்படும் அன்பும் அதிகமாக இருக்கிறது. ‘

அனுமதி அவசியம் :

விலங்குகளை வீட்டில் வளர்க்கும்போது அவற்றின் நடத்தையையும் உணவு உள்ளிட்ட இயற்கைத் தேவைகளையும் மனிதன் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. செல்லப் பிராணிகளை வளர்க்க வேண்டுமெனில், அதற்கு உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து அனுமதி பெற வேண்டியது கட்டாயமாகும். செல்லப் பிராணிகளுக்கான காப்பீட்டுத் திட்டங்களும் இந்தியாவில் நடைமுறையில் உள்ளன. குறிப்பாக நாய்கள் விபத்தில் சிக்கினாலோ, இறந்தாலோ, திருடப்பட்டாலோ அதற்கான காப்பீட்டைப் பெறமுடியும்.

மன அழுத்தத்தைக் குறைக்கும் :

நாயை செல்லப் பிராணியாக வளர்ப்பவர்கள், நாயுடன் சேர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்வதை ஒரு வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். எனவே உடல் பருமனின்றி நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்புடனும் இருக்க முடிகிறது.

செல்லப்பிராணிகளை வளர்ப்பது மன அழுத்தத்தைக் குறைப்பதால் இது ஒரு சிகிச்சை முறையாகவும் பரிந்துரைக்கப்படுகிறது.

தடுப்பூசியை தவிர்க்கக்கூடாது:

செல்லப்பிராணிகளால் அதை வளர்ப்பவர்களுக்கு சில உடல்நலக் கேடுகளும் விளைகின்றன. ஒவ்வாமைகளை உருவாக்குவதோடு ராபிஸ் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களுக்கும்கூட நாய்கள் காரணமாக இருக்கின்றன. செல்லப்பிராணிகளின் உடலில் காணப்படும் ஒட்டுண்ணிகள் மனிதர்களிடம் நோய்களைக் கடத்தவும் செய்கின்றன. எனவே செல்லப் பிராணிகளை வளர்ப்பவர்கள் நோய்த் தடுப்பு ஊசிகளைப் போடுவதும் அவசியமாகிறது. கருத்தடை அறுவை சிகிச்சைகளையும் செய்யலாம்.

நோய் பரவும் வாய்ப்புகள் :

மனிதர்களிடமிருந்து அவர்களது செல்லப் பிராணிகளுக்கும் நோய்கள் பரவுகின்றன. குறிப்பாக, நாய் மற்றும் பூனைகளுக்கு ஏற்படும் புற்றுநோய்களுக்கு அதை வளர்ப்பவர்களின் புகைப்பழக்கமே காரணமாக இருக்கிறது. மேலும், மனிதர்கள் தங்களுக்குப் பிடித்தமான உணவுப் பொருட்களை தங்களது செல்லப் பிராணிகளுக்கும் கொடுப்பதாலும் அவற்றின் உடல்நலம் பாதிப்புக்கு உள்ளாகுகிறது.

சாக்லேட், காப்பி, பழங்கள், வெங்காயம் பூண்டு சேர்த்து சமைக்கப்பட்ட உணவுகள், இனிப்பு அல்லது உப்பு கலந்த உணவுப் பொருட்கள் ஆகியவை மனிதர்களின் உடல் இயக்கத்திற்குப் பொருந்திப்போகும் உணவுவகைகள். இவை செல்லப்பிராணிகளுக்கு சரியான தேர்வுகள் இல்லை. இவ்வகை உணவுப் பொருட்கள் பிராணிகளிடத்தில் வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீரகப் பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்துகின்றன. எனவே செல்லப்பிராணிகளை பராமரிப்பது என்பது உரிய கவனத்தோடு செய்யப்பட வேண்டிய விஷயம் ஆகும்.

Similar News