உடற்பயிற்சி

அதிகாலை நடைப்பயிற்சி ஏன் அவசியம்?

Published On 2022-08-07 03:29 GMT   |   Update On 2022-08-07 03:29 GMT
  • சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும்.
  • நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக நடைப்பயிற்சி மேற்கொள்ளும் வழக்கத்தை பலரும் பின்பற்று கிறார்கள். இதனை உடற்பயிற்சியாகத்தான் கருத வேண்டும் என்றில்லை. காலை பொழுதில் சிறிது தூரம் நடந்து சென்று வரும் வழக்கத்தை தினமும் பின்பற்றி வந்தால் உடல் ரீதியாக மட்டுமின்றி மன ரீதியாக ஏராளமான நன்மைகளை பெறலாம். பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளில் இருந்தும் விலகி இருக்கலாம். அதிகாலை வேளையில் ஏன் நடைப்பயிற்சி அவசியம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

சீக்கிரம் சோர்வடைய செய்யாத உடற்பயிற்சிகளுள் நடைப் பயிற்சி முக்கியமானதாகும். உடலின் ஆற்றல் அளவை அதிகப் படுத்தவும் உதவும். நடைப்பயிற்சியின்போது உடல் தொடர்ச்சியான இயக்கத்தில் இருப்பதால் செல்கள் வழக்கத்தை விட அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும். அதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் அதிகரிக்கும். வீட்டிற்குள் அங்கும் இங்கும் 10 நிமிடங்கள் நடப்பது, நடைப்பயிற்சியில் சேராது. சரியான நடைப்பயிற்சி என்பது பூங்காவிலோ, தெருவிலோ குறைந்தபட்சம் 20 முதல் 30 நிமிடங்கள் நடப்பதாகும். தூக்கம் வராமல் தவிப்பவர்கள் 10 நிமிடங்கள் படிக்கட்டுகளில் நடப்பது அதிக ஆற்றலை தரும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வேலை செய்வதும், அதே வழக்கத்தை ஒவ்வொரு நாளும் பின்பற்றுவதும் மனச்சோர்வடையச் செய்யலாம். காலையில் நடப்பது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துவதோடு மனநிலையையும் மேம்படுத்தக்கூடியது. ஏனென்றால், நடைப்பயிற்சி ஒவ்வொரு உடல் உறுப்புகளுக்கும் வேலை கொடுக்கிறது. அதிக ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது. நேர்மறையான மன நிலையை உண்டாக்குகிறது. சுய மரியாதையை மேம்படுத்துதல், பதற்றத்தை குறைத்தல், மனச்சோர்வை குறைத்தல், நேர்மறை எண்ணத்தை உருவாக்குதல், மனநலப் பிரச்சினைகளை குறைத்தல் போன்ற சிறப்பம்சங்களும் நடைப்பயிற்சிக்கு உண்டு. தினமும் காலையில் குறைந்தபட்சம் 20 நிமிடங்களாவது நடக்க வேண்டும்.

காலையில் நடைப்பயிற்சி செய்வது உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகளில் பெரும் பகுதியை ஈடு செய்துவிடும். காலை வேளையில் 30 நிமிடம் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் நோய்கள் வராமல் தடுக்கலாம். இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் குறையும். ஒரு நாளைக்கு குறைந்தது 150 முதல் 300 நிமிடங்கள் நடக்க வேண்டும் என்றும், வாரத்தில் 7 நாட்களில் குறைந்தது 5 நாட்களாவது காலையில் நடக்க முயற்சிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.

காலையில் நடைப்பயிற்சி செய்வது கலோரிகளை எரிக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். காலை பொழுதில் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்தால், சுமார் 400 கலோரிகளை எரிக்கலாம். இது நடையின் வேகத்தைப் பொறுத்ததும், ஒவ்வொரு நபரின் ஆரோக்கியத்தை பொறுத்தும் மாறுபடும். காலையில் வயிறு காலியாக இருப்பதாலும், அந்த சமயத்தில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்காக உடலில் உள்ள கொழுப்புகள் கரைக்கப்படுவதாலும் நடைப்பயிற்சி செய்வது மிகவும் நன்மை பயக்கும்.

காலையில் நடைப்பயிற்சி மேற்கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சினைகளை குறைக்கலாம். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அதிகாலை நடைப்பயிற்சி சிறந்தது. இது பல்வேறு வைரஸ், பாக்டீரியா தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க உதவும். சுவாச திறனை மேம்படுத்தவும் வழிவகுக்கும். நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் நடத்திய ஆய்வின்படி, தினமும் 30 நிமிடங்கள் நடக்க ஆரம்பித்தால், சர்க்கரை நோய் மற்றும் இதய நோய் அபாயத்தை 19 சதவீதம் குறைக்கலாம்.

உடலில் ரத்த சர்க்கரை அளவை நிர்வகித்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் நடைப்பயிற்சி உதவும். நீண்ட நேரம் காலை நேர நடைப்பயிற்சி மேற்கொள்வது சில வகையான புற்றுநோய் களின் அபாயத்தில் இருந்தும் காக்கும்.

நடைப்பயிற்சி உடலின் அனைத்து முக்கிய தசைகளையும் வேலை செய்ய தூண்டும் ஆற்றலும் கொண்டது. இதன் மூலம் தசை ஆரோக்கியம் பலப்படும். கால் தசைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க வேகமாக நடக்கலாம். படிக்கட்டுகளில் ஏறலாம். அல்லது சாய் தள பரப்பில் நடந்து பயிற்சி செய்யலாம்.

காலையில் நடைப்பயிற்சி செய்பவர்களின் தூக்க திறன் மேம்படு வதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேசிய உடலியல் நிறுவனம் நடத்திய ஆய்வில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை நேர உடற்பயிற்சியின் காரணமாக இரவில் நன்றாக தூங்கி எழுவது தெரியவந்துள்ளது. தூக்கமின்மை பிரச் சினையை எதிர்கொண்டவர்கள் காலை நேர உடற்பயிற்சிக்கு பிறகு நன்றாக தூங்கி எழுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாலை நேர பயிற்சிகளை விட காலை நேர பயிற்சியே சிறந்தது. மாலையில் உடற்பயிற்சி செய்யும்போது உடல் சோர்வு மற்றும் தசைகள் பலவீனம் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Tags:    

Similar News