உடற்பயிற்சி

நீங்கள் அன்றாடம் செய்யும் வேலையையே உடற்பயிற்சி போல் ஆக்கிக் கொள்ளலாம்...

Published On 2023-03-25 05:58 GMT   |   Update On 2023-03-25 05:58 GMT
  • உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும், எளிமையானதும் நடைப்பயிற்சி.
  • வெயிலில் ‘வைட்டமின் D சத்து’ உள்ளதால் மாலையிலும் நடப்பது நல்லது.

உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. உடற்பயிற்சி என்பது நமது ஆரோக்கியத்துக்கு மிக மிக முக்கியமான ஒன்று. ஆனால் நம்மில் பெரும்பாலனவர்கள் உடற்பயிற்சி என்பதையே மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம், இன்றைய நவீன உலகின் தேவைகள். இன்று மனிதனின் தேவைகள் அதிகரித்து காலத்தின் கட்டாயமாக நாம் இயந்திர வாழ்க்கை வாழ்கிறோம். நேரமின்மை மிகப் பெரும் காரணமாக கூறப்பட்டாலும் சோம்பறித்தனத்தைத்தான் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். மூச்சை ஆழமாக இழுத்து மூச்சுப் பயிற்சி செய்யலாம். ஒவ்வொரு நிலையிலும் பத்து வினாடிகள் அப்படியே வைத்திருந்தால் உடலுக்கு நல்லது.

உடலில் கொழுப்பு வடிவில் சேமித்து வைக்கப்பட்ட கலோரிகள் எரிந்து தேவையற்ற உடல் கொழுப்பைக் கரைக்க உடற்பயிற்சி உதவுகிறது.

உடலின் "வளர்சிதை" மாற்றங்களை அதிகரிக்கிறது. ஜீரண நேரத்தை அதிகப்படுத்தி பசியை மட்டுப்படுத்தவும் இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி உதவுகிறது.

எப்படியானாலும் உடற்பயிற்சி செய்ய உங்களுக்கேற்ற ஒரு திட்டத்தைத் தயாரித்துக் கொள்ளுங்கள். ஒரே நாளில் மாற்றத்தை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து கடைப்பிடியுங்கள். மாற்றங்கள் காண்பீர்கள். உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்பொழுது தொடக்கத்தில் நேரம் குறைவாக ஆரம்பிக்க வேண்டும். மெல்ல மெல்ல நாளுக்கு நாள் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும். இதுவே தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய உதவும்.

நம் உடல் திடீர் மாற்றத்தை உடனே ஏற்றுக்கொள்ளாது. மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றம்தான் உடலுக்கும் நல்லது. மனதுக்கும் நல்லது.

காலையில் வேலைக்குப் போய்விட்டால் சோம்பேறித்தனத்தை முறித்து விட்டு சுறுசுறுப்பாக இருங்கள். பணித் தளத்தில் (சைட்டில்) வேலை பார்ப்பவர்கள் அங்கே இங்கே நடக்கும்பொழுது வாக்கிங்கை மனதில் வைத்துக்கொண்டு வேகமாக நடப்பது, தேவையிருந்தாலும், இல்லையென்றாலும் குனிந்து நிமிர்வது, மதிய வேளையில் அளவான ஓய்வு, மீண்டும் சுறுசுறுப்புடன் வேலை… என்றிருந்தால் அதுவே உங்களுக்கு உடற்பயிற்சியாகி விடும்.

அலுவலகத்தில் அமர்ந்து வேலை செய்பவர்கள் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை எழுந்து சிறிது நடக்க வேண்டும். முடிந்தால் முன் பின் குனிந்து உடலை ஸ்ட்ரெஸ் செய்ய வேண்டும். நின்று கொண்டு செய்யலாம் என்ற வேலைகளை நின்று கொண்டே செய்ய வேண்டும். அனாவசியமாக அமர்வதைத் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சியில் மிக முக்கியமானதும், எளிமையானதும் நடைப்பயிற்சி. அதாவது வாக்கிங். வாக்கிங்கை யார் வேண்டுமானாலும், எப்பொழுது வேண்டுமானாலும் மிக எளிதாக செய்யலாம்.

நடைப்பயிற்சியை ஒரு கடமையாகக் கொண்டு அன்றாடம் செய்து வந்தால் நலமாக வாழலாம். அதிகாலை வேளையில் நடைப்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது. மாலை வெயிலில் 'வைட்டமின் D சத்து' உள்ளதால் மாலையிலும் நடப்பது நல்லது.

தினமும் குறைந்தது 20 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். அல்லது குறைந்தது 45 நிமிடமாவது நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இதனால் உடலும், உள்ளமும் புத்துணர்ச்சி அடையும். இதயத்தின் இரத்த ஓட்டம் சீராக நடைபெறும்.

நடைப்பயிற்சியினால் அதிக இரத்த அழுத்தம் (ஹை ப்ளட் பிரஷ்ஷர்) குறைகிறது. சர்க்கரை நோய் (ஷுகர்) உள்ளவர்கள் நடைப்பயிற்சியை மேற்கொண்டால் இரத்தத்தின் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். உடல் பருமன், தொந்தி குறையும்.

தொடர் உடற்பயிற்சியினால் இரவில் நன்றாக தூக்கம் வரும். இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும். மலச்சிக்கல் வராது. அஜீரணக் கோளாறு அகன்று போகும்.

உடற்பயிற்சியினால் இதயத்தில் சேரும் கெட்ட கொழுப்பு கரைந்து விடும். இதயம் புத்துணர்ச்சி பெறும். இதனால் ஹார்ட் அட்டாக் வருவது பெரும்பாலும் தவிர்க்கப்படும்.

Tags:    

Similar News