பெண்கள் உலகம்
தியானம்

பத்மாசனத்தில் சுவாதிஸ்டான தியானம்

Published On 2021-09-11 08:22 IST   |   Update On 2021-09-11 08:22:00 IST
இந்த சுவாதிஸ்டான தியானம், ரத்த அழுத்தம் வராமல் வாழ வழிவகை செய்கின்றது. நல்ல பிராணசக்தி இந்த சுவாதிஸ்டான சக்கர மையத்திற்கு கிடைப்பதாக எண்ணவும்.
விரிப்பில் கால்களை நீட்டி அமரவும். ஒவ்வொரு காலாக தொடையில் மடித்து போடவும். படத்தை பார்க்கவும். கைவிரல்களை சின் முத்திரையில் வைக்கவும். கட்டை விரல் ஆள்காட்டி விரல் நுனியை தொடவும். கண்களை மூடி உங்களது மனதை தலை வெளி தசைகளில் நிறுத்தி, அதில் உள்ள எல்லா டென்ஷன், அழுத்தம் உடலை விட்டு நீங்குவதாக எண்ணவும்.

அந்தப் பகுதியில் நல்ல பிராண ஆற்றல் கிடைப்பதாக எண்ணவும். பின் தோள்பட்டை வெளி தசைகளில் உங்கள் மனதை நிறுத்தி, அதில் உள்ள எல்லா டென்ஷனும் உடலை விட்டு நீங்குவதாக மனதால் எண்ணி தளர்த்தவும். இதேபோல் ஒவ்வொரு உறுப்பின் வெளி தசைகளில் மனதை நிறுத்தி தளர்த்த வேண்டும். இதய வெளி தசைகள். வயிற்று வெளி தசைகள், வலது கால், இடது கால் வெளி தசைகளிலுள்ள எல்லா டென்ஷன், அழுத்தங்களையும் பூமிக்கு அர்ப்பணித்ததாக எண்ணவும்.

பின், மிக மெதுவாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். பத்து முறைகள் இவ்வாறு செய்யவும். பின் நமது முதுகுத்தண்டின் கடைசி பகுதியான ஆசனவாய் அருகில் உள்ள மூலாதார மையத்தில் உங்களது மனதை வைத்து மூச்சை இருபது வினாடிகள் கவனிக்கவும். பின் அதிலிருந்து 4விரல்கட்டை மேல் பகுதியில் உங்கள் மனதை நிலை நிறுத்தவும். இது சுவாதிஸ்டான சக்கரமாகும்.

இந்த சக்கரத்தில், இந்த இடத்தில் உங்களது மூச்சோட்டத்தையும், மனதையும் நிறுத்தி ஐந்து நிமிடங்கள் தியானிக்கவும். நல்ல பிராணசக்தி இந்த சுவாதிஸ்டான சக்கர மையத்திற்கு கிடைப்பதாக எண்ணவும். பின் மீண்டும் முதலில் ஆரம்பித்த மூலாதார சக்கரத்தில் ஒரு பத்து வினாடிகள் தியானிக்கவும். மெதுவாக கண்களை திறந்து சாதாரண நிலைக்கு வரவும்.

இந்த தியானம் அட்ரீனல் சுரப்பிக்கு நல்ல சக்தியளிக்கின்றது. இச்சுரப்பி சரியாக வேலை செய்யாவிட்டால் உடலில் ரத்த ஓட்டம் குறையும். பசியிருக்காது. தலை சுற்றல் ஏற்படும். இந்த சுரப்பிகள் மனித உடலில் ரத்தம், தண்ணீர் அளவை சரி செய்கின்றது. இந்த சுவாதிஸ்டான தியானம், ரத்த அழுத்தம் வராமல் வாழ வழிவகை செய்கின்றது.

யோகக் கலைமாமணி
பி.கிருஷ்ணன் பாலாஜி M.A. (YOGA)
6369940440

Similar News