பெண்கள் உலகம்
பவனமுக்தாசனம்

உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றும் ஆசனம்

Published On 2021-04-12 07:54 IST   |   Update On 2021-04-12 07:54:00 IST
உடலில் இருக்கும் கெட்ட வாயுக்களை வெளியேற்றுவதற்கு உதவும் ஆசனம் இது. மேலும் இந்த ஆசனம் அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்பகுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும்.
மல்லாந்து படுத்துக் கைகளை உடலோடு ஒட்டி வைக்கவும். உடலை ஆசுவாசமாக வைத்திருங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடலாம். கால்களை 90 டிகிரி மேலே தூக்குங்கள். இதைச் செய்ய இயலாதவர்கள் சற்றே மடித்த நிலையிலும் தூக்கலாம்.

தூக்கிய காலை மடித்து அடிவயிறு, வயிறு ஆகியவற்றின் மேல் படியும்படி வையுங்கள். மடித்த கால்களைக் கட்டிக்கொள்ளுங்கள். தொடைகள் இரண்டும் வயிற்றுப் பகுதியை நன்கு அழுத்தியிருக்க வேண்டும். தலையைத் தூக்கி முழங்காலில் தாடை படும்படி வைக்க வேண்டும். மூச்சு சீராக இருத்தல் நலம். மூச்சைப் பிடித்துக்கொண்டிருப்பதைத் தவிருங்கள்.

கழுத்துக்கு சிரமம் ஏற்படக் கூடாது. இடுப்பு அல்லது முழங்கால் வலிக்கும் அளவுக்கு அழுத்துவதைத் தவிருங்கள். தொடைகளை வயிற்றோடு சேர்த்து வைக்க முடியாவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்யலாம். ஒரு சில நாட்களில் வசப்படும். இல்லாவிட்டாலும் முடிந்தவரை அழுத்தினால் போதும்.

பலன்கள்

அடிவயிறு, தொடைகள், இடுப்பு, பின்பகுதி ஆகியவற்றுக்கு வலு சேர்க்கும். கழுத்துக்குப் பயிற்சி கிடைக்கும். அடிவயிறு அழுத்தப்படுவதால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இது உள் உறுப்புகளுக்கு நல்லது.

பெருங்குடலில் தேங்கியிருக்கும் வாயுவை வெளியேற்றும். ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்யும். மலச்சிக்கல் குறையும் / நீங்கும். முதுகின் அடிப்புறத் தசைகளுக்கு வலு சேரும்.

முதுகெலும்புக்கும் தண்டுவடத்துக்கும் ஆசுவாசம் கிடைக்கும். பிள்ளைப்பேறுக்கான வாய்ப்பு, செயல் திறன் கூடும்.

Similar News