லைஃப்ஸ்டைல்
ஸ்கிப்பிங் பயிற்சி

இந்த உடற்பயிற்சியை செய்யுங்க... உடலில் ஏற்படும் அதிசயத்தை பாருங்க...

Published On 2021-04-02 02:29 GMT   |   Update On 2021-04-02 02:29 GMT
10 நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடினால் எரியும் கலோரியும், 10 நிமிடம் தொடர்ந்து இந்த பயிற்சி செய்யும் போது எரியும் கலோரியும் சமமாக இருக்கும். இதனால், உடல் எடை வேகமாகக் குறையும்.
உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் அதற்கு ஆயிரம் காரணங்களைச் சொல்லலாம். கொரோனா பயம், ஜிம் பாதுகாப்பு இல்லை, சாலையில் வாக்கிங் செல்ல முடியாது, சின்ன சைஸ் மொட்டை மாடியில் வாக்கிங் செல்வது கஷ்டம், டிரெட் மில் எல்லாம் வாங்க முடியாது என்று உடற்பயிற்சி செய்யாததற்குக் காரணங்களை அடுக்கிக் கொண்டே செல்வார்கள். ஒரு கயிறு இருந்தால் போதும் உடலை ஃபிட்டாக்கலாம் என்கின்றனர் உடற்பயிற்சி நிபுணர்கள்!

வீட்டுக்குள்ளேயே ஸ்கிப்பிங் விளையாடுவது தசைகளை உறுதிப்படுத்தும், உடலுக்கு ஸ்டாமினாவைத் தரும், நுரையீரல் செயல்பாட்டை அதிகரிக்கச் செய்யும். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களுக்கு சிறந்த பயிற்சி ஸ்கிப்பிங்.

ஒரு நிமிடம் ஸ்கிப்பிங் விளையாடினாலும் அது 10 கலோரியை எரிக்கும். மேலும், கால், பின் சதை, தோள்பட்டை, வயிறு, கைகளை உறுதியாக்கும். 10 நிமிடம் தொடர்ந்து பயிற்சி செய்தால் குறைந்தபட்சம் 200 கலோரி வரை எரிக்க முடியும்.

10 நிமிடத்தில் ஒரு மைல் தூரத்தை ஓடினால் எரியும் கலோரியும், 10 நிமிடம் தொடர்ந்து ஸ்கிப்பிங் செய்யும் போது எரியும் கலோரியும் சமமாக இருக்கும். இதனால், உடல் எடை வேகமாகக் குறையும்.

ஸ்கிப்பிங் உடல் எடையைக் குறைப்பது மட்டுமல்ல, ஒட்டுமொத்த உடலுக்குமே பயிற்சியாக விளங்குகிறது. கைகளை சுழற்றி, குதிக்கும்போது கை, கால், இடுப்பு, வயிறு என எல்லா பகுதிகளும் பலம் பெறுகின்றன.

ஸ்கிப்பிங் செய்வது இதயத்துக்கான சிறந்த கார்டியோ பயிற்சியாகும். இது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்கிறது. அதிவேகத்தில் இதயம் துடிப்பது என்பது இதயத்தசைகள், ரத்த நாளங்களை பலம் பெறச் செய்கின்றன. இதனால் மாரடைப்பு. பக்கவாதம் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது.

ஸ்கிப்பிங் செய்வது உடலின் நிலைத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. கையை சுழற்றி கயிற்றை சுழற்றும்போது கால்கள் குதிக்க வேண்டும். இதற்கு மூளை மற்றும் உடலின் ஒருங்கிணைப்பு அவசியம். குதித்து நிலையாக நிற்க வேண்டும். இப்படி ஒன்றுக்கு ஒன்று இணைந்து செயல்படும்போது உடலின் பேலன்ஸ் அதிகரிக்கிறது.

ஸ்கிப்பிங் பயிற்சி எலும்புகளை வலுப்பெறச் செய்கின்றன. எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கச் செய்து ஆஸ்டியோபொரோசிஸ் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

இதயம் அதிவேகமாகத் துடித்து உடல் முழுவதும் ரத்தத்தைக் கொண்டு போய் சேர்க்கிறது. உடல் முழுக்க ரத்த ஓட்டம் சீராகிறது. இதன் காரணமாகச் சருமத்தில் தேங்கிய கழிவுகள் அகற்றப்படுகின்றன. சருமம் பொலிவு பெறுகிறது.

குதித்து பயிற்சி செய்யும்போது நுரையீரலுக்கான ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நுரையீரல் தன் முழு கொள்ளளவுடன் செயல்படத் தூண்டுகிறது. இதன் காரணமாக நுரையீரலின் செயல்திறன் மேம்படுகிறது.
Tags:    

Similar News