லைஃப்ஸ்டைல்

இதயம் ஆரோக்கியத்திற்கு உதவும் உடற்பயிற்சிகள்

Published On 2017-01-26 06:52 GMT   |   Update On 2017-01-26 06:52 GMT
இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பற்றி விரிவாக கீழே பார்க்கலாம்.
இதயத்தை பாதுகாக்கவும், ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பல உடற்பயிற்சிகள் உள்ளன. இத்தகைய உடற்பயிற்சி மூலம் இதயத்தை நல்ல உறுதியுடனும், ஆரோக்கியத்துடனும் வைத்துக் கொள்ள முடியும். எப்படியெனில் இவ்வகை பயிற்சிகள் இதயத் துடிப்பின் வேகத்தை அதிகரிக்கச் செய்வதால், இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது.

பொதுவாக இதயத்தை நல்ல நிலையில் வைத்திருப்பதன் மூலம், உடல் ஆக்ஸிஜனைப் பயன்படுத்தும் முறையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணப்படும். அதிலும் இதயம் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது, படிகளில் ஏறும் போது களைப்படைய மாட்டோம். அதிக நேரம் உடற்பயிற்சிகள் செய்வதால், இதயமானது உடல் முழுவதும் இரத்தத்தை நன்கு பம்ப் செய்து, இதயத்துடிப்பை சீராக்கி உடலுக்கு நன்மை பயக்கிறது.

குறிப்பாக இதயத்துடிப்பை அதிகரிக்க, ஒரு நாளைக்கு முப்பது நிமிடங்கள் ஏரோபிக் பயிற்சிகள் செய்வது மிகவும் நல்லது. வாரத்திற்கு மூன்று நாட்கள், இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நலம். மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு உடற்பயிற்சிகள் உள்ளன. இப்போது அந்த உடற்பயிற்சிகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அதனை தினமும் பின்பற்றி இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

சுறுசுறுப்பான நடைப்பயிற்சி, இதயம் நன்கு இயக்குவதற்கு உதவுகிறது. உடற்பயிற்சி செய்ய நேரம் கிடைக்கவில்லை என்றால், ஒரு நாளைக்கு பலமுறை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம்.

மாடிப்படிகளில் ஏறும் பயிற்சியானது, இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.

ஏரோபிக் பயிற்சியானது வயதாவதால் ஏற்படும் எலும்பு மற்றும் தசை மாற்றங்களைத் தடுக்க உதவுகிறது. இவ்வகைப் பயிற்சிகள் இதயத்தின் துடிப்பை அதிகரிக்காது. ஆனால் உடலுக்கு நல்ல ஸ்டாமினாவைத் தரும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் வலுவிழந்து காணப்படும் தசைகள் மற்று இதர தசைப்பகுதிகள் உறுதி பெறவும் இப்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

நீச்சல் பயிற்சியானது உடல் முழுவதற்குமான ஒரு சிறந்த பயிற்சியாகும். இந்த பயிற்சியானது இதயத்துடிப்பை அதிகரிக்கச் செய்வது மட்டுமின்றி, இதயத்தின் முழு ஆரோக்கியத்திற்கும் உதவியாக உள்ளது.

அனைத்து உடற்பயிற்சிகளையும் கலந்து செய்ய வேண்டும். உதாரணமாக, இதயத்திற்கான பயிற்சி செய்யும் பொழுது, இடையிடையே மூன்று நிமிடங்களுக்கு ஒருமுறை உடல் பலத்திற்கான பயிற்சியையும் ஒரு நிமிடத்திற்கு செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐந்து முதல் பத்து வகையான உடல் பலத்திற்கான பயிற்சிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் ஒரு வகையைப் பயிற்சி செய்து, பின் குறைந்த எடை தூக்கும் பயிற்சியினை மீண்டும் மீண்டும் செய்து, இதய ஓட்டம் அதிகரிப்பதற்கான பயிற்சிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதால் தசைகள் உறுதி பெற்று, இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் வழிவகுக்கும்.

Similar News