லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் கிறுக்கல்

குழந்தைகளின் கிறுக்கல்களுக்கு எளிய தீர்வு

Published On 2021-10-22 08:41 GMT   |   Update On 2021-10-22 08:41 GMT
வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.
கொரோனா அச்சுறுத்தலால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் குழந்தைகள் பலர் தங்களின் தனித்திறன்களை மெருகேற்றிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறமிருக்க குழந்தைகளின் கிறுக்கல்கள் இல்லாத வீட்டு சுவர்களை பார்ப்பது அரிது. பேனா, பென்சில், கிரையான்ஸ் இவற்றுள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்கள் கைவண்ணத்தை காண்பித்திருப்பார்கள். வீட்டுச்சுவரில் ஆங்காங்கே குழந்தைகளின் கிறுக்கல்கள் இடம் பிடித்திருந்தால் அவற்றை வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டு எளிமையாகவே அகற்றிவிடலாம்.

பேக்கிங் சோடா: இது சமையலறையில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும். சுவர் கறைகளை போக்கும் தன்மையும் இதற்கு உண்டு. பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து பசை போல் குழப்பிக்கொள்ளவும். அதனை பெயிண்ட் பிரஷிலோ, வீணான பல் துலக்கும் பிரஷிலோ முக்கி சுவரில் கறைகள் படிந்திருக்கும் பகுதியில் அழுத்தி தேய்த்தால் போதும். எல்லாவிதமான கறைகளும் முற்றிலும் நீங்கிவிடும்.

பற்பசை: பல் துலக்க பயன்படுத்தும் பற்பசையையும் குழந்தைகளின் கிறுக்கல்களை போக்குவதற்கு பயன்படுத்தலாம். பென்சில், கிரையான்ஸ் கறைகள் எளிதில் நீங்கிவிடும். பற்பசையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை போல் கெட்டியாக குழப்பிக்கொள்ளவும். அதனை பிரஷில் முக்கி கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்த்தாலே போதும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் கறைகள் இருந்த சுவடே தெரியாது.

வினிகர்: தண்ணீரின் அளவில் நான்கில் ஒரு பங்கு வினிகர் கலந்து அதில் பஞ்சை நனைத்து கறை படிந்துள்ள பகுதியில் துடைக்க வேண்டும். சில கறைகள் எளிமையாக நீங்கிவிடும். இல்லாவிட்டால் சிறிது நேரம் கழித்து வினிகரை மட்டும் பஞ்சில் நனைத்து தேய்த்தால் போதும். வெதுவெதுப்பான நீரில் வினிகரை ஊற்றி பயன்படுத்துவது சிறந்தது.

வாஷிங் சோடா: சுவர் கறைகளை அகற்றும் விஷயத்தில் இது பேக்கிங் சோடாவை விட சிறப்பாக செயல்படக்கூடியது. வாஷிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து குழப்பி, கறை படிந்திருக்கும் இடத்தில் அழுத்தி தேய்க்க வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து அந்த இடத்தில் பிரஷ் கொண்டு தேய்த்தால் கறைகள் காணாமல் போய்விடும்.
Tags:    

Similar News