லைஃப்ஸ்டைல்
இடைவெளியின்றி குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்

இடைவெளியின்றி குழந்தைகள் ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்

Published On 2021-09-28 03:43 GMT   |   Update On 2021-09-28 06:56 GMT
குழந்தைகள் இடைவெளியின்றி தொடர்ந்து ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதிக்க கூடாது என்றும் பெற்றோருக்கு கல்வித்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் குழந்தைகள் செல்போன் மற்றும் அதில் இணையதளத்தை அதிகம் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றனர் என்றும், அதிலும் குறிப்பாக ஆன்லைன் விளையாட்டை அதிகளவில் பதிவிறக்கம் செய்து, அதில் அதிக நேரத்தை செலவிடுகிறார்கள் என்றும் மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனை கட்டுப்படுத்த மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் செயலாளர் அனிதா கர்வால் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அந்த ஆலோசனையில் குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டில் ஆர்வம் காட்டாமல் இருப்பதையும், அதில் இருக்கும் விளைவுகள் குறித்தும், ஆன்லைன் விளையாட்டில் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றியும் கூறப்பட்டுள்ளது. இதை உடனடியாக பின்பற்ற வலியுறுத்தி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி ஆணையர் அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ள சில முக்கிய அம்சங்கள் வருமாறு:-

தொடர்ந்து விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்

* செல்போன் விளையாட்டு செயலியை வாங்குவதை பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டாம். செயலிக்கான சந்தாக்களுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளை பதிவு செய்வதை தவிர்க்கவும். குழந்தைகள் விளையாடுவதற்கு பயன்படுத்தும் மடிக்கணினி அல்லது செல்போனை நேரடியாக வாங்க அனுமதிக்கக்கூடாது.

* இதுவரை கேள்விப்படாத வலைதளங்களில் இருந்து மென்பொருள் மற்றும் விளையாட்டு செயலிகளை பதிவிறக்கவேண்டாம் என்று குழந்தைகளிடம் அறிவுறுத்த வேண்டும். ஆன்லைன் விளையாட்டில் ஆன்லைன் உரையாடல் மூலம் பெரியவர்கள் உள்பட யாருடனும் தொடர்புகொள்ளவேண்டாம் என்று அறிவுறுத்துங்கள். இது ஆன்லைனை தவறுதலாக பயன்படுத்துபவர்கள் அவர்களை தொடர்பு கொள்ளும் அபாயத்தை அதிகரிக்க செய்யும். இடைவெளி நேரம் எடுக்காமல் நீண்ட நேரம் தொடர்ந்து ஆன்லைனில் விளையாடுவதை அனுமதிக்காதீர்கள்.

கண்காணிக்க வேண்டும்

* ஆன்லைன் விளையாட்டில் தனி உரிமைகளை பாதுகாக்க பிள்ளைகளின் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல், வேறொரு பெயரை பயன்படுத்த அறிவுறுத்துங்கள். குழந்தைகள் விளையாடும் விளையாட்டுகளில் பங்கேற்பதற்கான வயது மதிப்பீட்டையும் சரிபார்க்கவேண்டும்.

* ஆன்லைன் விளையாட்டுகளில் சிலவகை விளையாட்டுகள் அதிகநேரம் செலவழிப்பதை ஊக்குவிக்கிறது என்பதை குழந்தைகள் புரியும்படி உதவுவதோடு, ஆன்லைன் சூதாட்டம் என்ன? அதன் விளைவுகள் என்ன? என்பதையும் எடுத்துச்சொல்லவேண்டும்.

* குழந்தைகளின் நடவடிக்கை வழக்கத்துக்கு மாறாக இருத்தல், சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவழிப்பது, இணையதளத்தை பயன்படுத்திய பிறகு, குறுஞ்செய்திகளை அனுப்பியபிறகு கோபத்துடன் இருப்பது, அவர்களின் செல்போனில் புதிய தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் தொடர்புகள் இருப்பது ஆகியவற்றை பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியர்கள்...

அதேபோல், ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் மீது சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக பள்ளி அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். இணையதளத்தின் நன்மை, தீமைகள் குறித்து அவ்வப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்துவதை உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News