பெண்கள் உலகம்
குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி?

குழந்தைகள் பொய் சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது எப்படி?

Published On 2021-09-07 13:54 IST   |   Update On 2021-09-07 13:54:00 IST
பொய் சொல்வது என்பது குழந்தைகள் செய்யும் அடிப்படையான விஷயங்களில் ஒன்றாகும். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.
பெற்றோர்கள், குறிப்பாக தாய்கள், தங்கள் குழந்தைகள் பொய் சொல்கிறார்களா என்பதன் மீது ஒரு கண் வைக்க வேண்டும். அப்படி பொய் சொல்கிறார்கள் என ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து விட்டால், இந்த தீய பழக்கத்தை சுலபமாக மாற்றி விடும் வாய்ப்புள்ளது. குழந்தைகள் வளர்க்க மற்ற விஷயங்களில் தேவைப்படும் பொறுமை இதற்கும் தேவைப்படும். உங்கள் குழந்தை பொய் பேசுகிறார்களா என்பதை கண்டறிய அவர்களுடன் மிகவும் நெருக்கமாக பழக வேண்டும்.

ஆனால் இது ஒன்றே இதனை தீர்ப்பதற்கான வழியல்ல. சில தாய்மார்களுக்கு சரியாக இருக்கும் இந்த முறை சிலருக்கு சரியாக அமைவதில்லை. குழந்தைகள் சந்திக்கும் சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் பல பல. அதனால் இதற்கான தீர்வுகளும் ஒன்றாக இருப்பதில்லை. அதனை புரிந்து கொண்டு அதற்கேற்ப நீங்கள் செயல்பட வேண்டும். பொய் சொல்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள, இதோ உங்களுக்காக சில வழிகள். சில குணங்களும் உடல் மொழியும் அவர்கள் பொய் கூறுகிறார்களா என்பதை உங்களுக்கு காட்டிக் கொடுத்து விடும்.

கண் தொடர்பு

உங்கள் குழந்தை பொய் சொன்னால், கண் தொடர்பை அவர்கள் தவிர்ப்பார்கள். இது அவர்கள் பொய் பேச தொடங்கும் ஆரம்ப நிலையாகும். ஆனால் அவர்கள் வளர வளர இதனை சமாளிக்க அவர்கள் கற்றுக் கொள்வார்கள். அதன் பின் எந்த ஒரு பயமும் இல்லாமல் உங்கள் கண்களை பார்த்தே அவர்கள் பொய் கூற ஆரம்பித்து விடுவார்கள். ஆரம்ப கட்டத்திலேயே இதனை கண்டு பிடித்து விட்டால் இதனை தவிர்த்து விடலாம். பொய் சொல்வது தவறு என்பதை அவர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும். அதே போல் அவர்கள் ஏன் பொய் சொல்கிறார்கள் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
சொன்னதையே சொல்லுதல் மற்றும் முகத்தை தொடுதல்

உடல் மொழியை வைத்தும் கூட பொய் சொல்லுபவர்களை கண்டு கொள்ளலாம். சொன்னதையே திரும்ப திரும்ப சொன்னால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அவர்கள் மேல் தாராளமாக சந்தேகிக்கலாம். அதே போல் முகத்தை அரித்து கொள்ளுதல், மூக்கு அல்லது தலையை தொடுதல் ஆகியவைகளும் கூட அவர்கள் பொய் சொல்வதற்கான அறிகுறிகளாகும்.

முரண்பாடுகள்

அவர்கள் கூறும் கதைகளில் முரண்பாடுகள் இருந்து, சொன்னதையே திரும்பி திரும்பி சொல்வதை போன்ற உணர்வை நீங்கள் அடைந்தால், கண்டிப்பாக அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். உண்மையை ஒத்துக் கொள்ள உங்களுக்கு கஷ்டமாக தான் இருக்கும். ஆனால் நீங்கள் திடமாக இருந்து, இந்த தீய பழக்கத்தில் இருந்து அவர்களை மீட்க முயற்சிக்க வேண்டும்.

தற்காப்பு எதிர்வினைகள்

குழந்தைகள் பொய் சொல்லும் போது அதனை நீங்கள் நம்பவில்லை என்பதை அவர்கள் அறிந்தால், இதனை நீங்கள் சாதாரணமாக கவனிக்கலாம். பெற்றோர்கள் எது செய்தாலும் தவறு என எதற்கெடுத்தாலும் சண்டை போடும் விடலை வயதுடையவர்களிடம் இதனை பொதுவாக காணலாம். அன்பும் பாசமும் எப்போதுமே அவர்களை நம் வசமாக்கி விடும். காலப்போக்கில் அவர்களிடம் மாற்றத்தையும் காணலாம்.

பதற்றம் மற்றும் குழப்பம்

பொய் சொல்லும் போது குழந்தைகளிடம் காணப்படும் மற்றொரு குணமிது. ஏதாவது கதை கூறும் போது அவர்கள் பதற்றத்துடன் அல்லது நெளிந்து கொண்டே கூறினால், உங்களிடம் பொய் சொல்கிறார்கள் என அர்த்தமாகும். அதே போல் உங்கள் குழந்தை அதிகமாக பேசாமல் கமுக்கமாக இருந்தாலும் ஏதோ பொய் சொல்வதற்கான அறிகுறியே.

Similar News