லைஃப்ஸ்டைல்
போதையில் பொசுங்கும் இளசுகள்

போதையில் பொசுங்கும் இளசுகள்.. சிக்காமல் பிள்ளைகளை பாதுகாப்பது எப்படி?

Published On 2021-09-04 08:33 GMT   |   Update On 2021-09-04 08:33 GMT
போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.
போதைப் பொருட்களின் பழக்கம் பலவிதங்களில் படர்ந்து கொண்டிருப்பது, திகிலூட்டும் உண்மை. இதன் வீரியத்தை உணர்த்தும் விதமாக அண்மைக் காலத்தில் ஒருபுறம் போதைப் பொருட்களை பயன்படுத்தும் இளைஞர்கள் பெருமளவு போலீசில் சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் ஏராளமான போதைப் பொருட்களும் போலீசாரால் கைப்பற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்த போதை ஆபத்தில் இருந்து உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற நீங்கள் உறுதியாக செயல்பட வேண்டிய கட்டாயம் உருவாகியிருப்பதை மறந்துவிடக்கூடாது.

பெரும்பாலானவர்களுக்கு அவர்கள் வீட்டில் இருந்துதான் போதை முதலில் அறிமுகமாகிறது. வீட்டில் தந்தை மது அருந்தும் பழக்கம் கொண்டவராக இருக்கும்போது தானும் அதை சுவைக்கிறார்கள். அடுத்து, நண்பர்களாக பழகுகிறவர்கள் இதில் வழிநடத்திச் செல்கிறார்கள். வளரிளம் பருவத்தில் பெற்றோர் சொல்லைவிட நண்பர்கள் சொல்லுக்கு அதிக மதிப்பளிக்கத் தொடங்குவார்கள். அப்போது திரில்லுக்காக, ஜாலிக்காக, அதில் என்னதான் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதற்காக, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்வதற்காக, தானும் ஹீரோதான் என்று காட்டிக்கொள்வதற்காக...! இப்படிப்பட்ட காரணங்களில் ஏதாவது ஒன்றை கூறிக்கொண்டு அத்தகைய ‘நண்பர்களோடு’ சேருகிறார்கள்.

(முன்பெல்லாம், ‘அப்பா அம்மாவிடம் இருந்து அன்பு கிடைக்கவில்லை’, ‘என்னை எல்லோரும் அலட்சியப் படுத்துகிறார்கள்’, ‘காதல் தோல்வி என்னை பாதித்து விட்டது’ என்றெல்லாம் போதையில் விழுந்ததற்கு காரணம் சொன்னார்கள். இப்போது அப்படிப்பட்ட காரணங் களை பெரும் பாலானவர்கள் சொல்வ தில்லை. முன்பு ‘தெரியாமல் இந்த பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்’ என்று சொன்னவர்கள் அதிகம். இப்போது ‘தெரிந்தேதான் அதை பயன்படுத்தினேன்’ என்று சொல்பவர்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள்)

கஞ்சா புகைத்தலுக்கு உள்ளாகி மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவன் ஒருவன் கவுன்சலிங்குக்கு ஒத்துழைத்தபோதும், ஒரே ஒரு கோரிக்கையை முன்வைத்தான். அது வித்தியாசமான கோரிக்கை. ‘நாங்கள் நான்கு நண்பர்கள் சேர்ந்து புகைக்கிறோம். அவர்களையும் திருத்துங்கள். அப்போதுதான் என்னாலும் திருந்தமுடியும்’ என்றான். இந்த அளவுக்கு போதை நண்பர்களின் நட்பு இறுக்கமானதாக இருக்கிறது. இதில் இருக்கும் இன்னொரு ரகசிய உண்மையையும் சமூகம் உணர்ந்துகொள்ளவேண்டும். போதைப் பொருள் பழக்கத்தில் இருந்து ஒருவரை மீட்டுவிட்டாலும், நண்பர்கள் போதை பழக்கம் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் மூலம் அவர் மீண்டும் அந்த பழக்கத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகம்.

ஸ்டிமுலன்ட் டிரக்ஸ் என்று அழைக்கப்படும் போதைப் பொருள், அதை பயன்படுத்துகிறவரை சில நாட்கள் தூங்கவிடாது. இரவும் பகலும் அவர்கள் உற்சாகத்தில் மிதப்பதுபோல் ஒருவித தூண்டுதல் மாயையை தோற்றுவிக்கும். மீண்டும் அவர்கள் தூங்கவேண்டும் என்றால் அதற்கு டிப்ரசன்ட் டிரக்ஸ் வகை போதைப் பொருளை அவர்கள் தேடும் நிலை உருவாகிவிடும். ஆஸ்டலில் தங்கிப்படிக்கும் மாணவ- மாணவிகளில் ஒருசிலர் முதலில் இருந்தே பரீட்சைக்கு முறையாக தயாராகாமல், பரீட்சை நெருங்கும் நேரத்தில் பயந்துபோய் தூங்காமல் விழித்திருந்து படிக்க முடிவுசெய்வார்கள்.

அப்படிப்பட்ட தருணத்திற்காக காத்திருக்கும் பிரச்சினைக்குரிய நண்பர்கள், அவர்களை மிக எளிதாக தன்வசப்படுத்தி ஸ்டிமுலன்ட் டிரக்ஸை அறிமுகம் செய்வார்கள். அதை உபயோகிக்கும் அவர்களுக்கு, ஒருசில நாட்கள் கழித்து, தூக்கத்திற்காக டிப்ரசன்ட் டிரக்ஸை கொடுப்பார்கள். இப்படியே அவர்களை போதைப்பொருள் பழக்கத்திற்கு உள்ளாக்கிவிடுவார்கள். ஆஸ்டல் மாணவ- மாணவிகள் இப்படிப்பட்டவர்களிடம் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடு பழகவேண்டும்.

இ்ந்த விஷயத்தில் பெற்றோர்களின் கடமை என்ன?

- உங்கள் பிள்ளைகள் வீட்டில் இருந்தே பள்ளிக்கு சென்றாலும்- கல்்லூரிக்கு சென்றாலும், ஆஸ்டலில் தங்கிப்படித்தாலும் அவர்களை தொடர்ச்சியாக கண்காணியுங்கள். அவர்களிடம் ஏற்படும் சின்னச்சின்ன மாற்றங்களையும் கவனியுங்கள். ‘என் பிள்ளை அப்படி எல்லாம் செய்யமாட்டான்!’ என்ற எண்ணம் உங்களிடம் இருந்தால் முதல் வேலையாக அந்த எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள். யாரும், எந்த நேரத்திலும் இந்த பழக்கத்திற்கு உள்ளாகலாம் என்ற நிஜத்தை ஏற்றுக்கொள்ள முன்வாருங்கள்.

- பிள்ளைகளின் உடையையும், உடலையும் எல்லா நேரங்களிலும் கவனித்துப்பாருங்கள். உடையில் புகைப்பிடித்தலின்போது தீப்பட்ட சிறிய துவாரங்கள் தென்படலாம். உடலில் போதை ஊசிகளை குத்திக்கொண்ட அடையாளம் இருந்தால் கண்டுபிடித்துவிடலாம்.

- அவர்களது தூக்கத்திலும், உணவிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். சிலர் தூங்கவே மாட்டார்கள். சிலர் அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகுவார்கள். மிக அதிகமான நேரம் டாய்லெட்டில் போய் உட்கார்ந்துகொள்வார்கள். சந்தேகத்திற்கிடமான முறையில் அவர்கள் நடத்தையிருக்கும். தன்னைவிட அதிக வயதுள்ளவர்களிடம் நெருக்கமாக இருப்பார்கள். இப்படி எந்த சந்தேகம் ஏற்பட்டாலும், அதை தீரவிசாரித்து தெளிவு பெறுங்கள்.

போதையில் சிக்காமல் இருக்கவும், சிக்கியவர்களை மீட்டுக் கொண்டுவரவும் இரண்டு அருமையான ‘மருந்துகள்’ இருக்கின்றன. ஒன்று- உடலுக்கு ஊக்கம் தரும் விளையாட்டுகளில் ஈடுபடுத்துவது. இரண்டு- தியானம் மேற்கொள்வது. சிறுவயதில் இருந்தே இந்த இரண்டிலும் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். உடலும், மனமும் அதன் மூலம் பலம்பெற்று ஒருநிலைப்படும். அவர்களது வாழ்க்கையும் வளம்பெறும்.

- விஜயலட்சுமி பந்தையன்.
Tags:    

Similar News