லைஃப்ஸ்டைல்
குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்

Published On 2021-07-16 03:34 GMT   |   Update On 2021-07-16 03:34 GMT
குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.
குழந்தைகளை பாதுகாக்கும் வழிகாட்டுதல்கள்கொரோனா 3-வது அலை குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். பெரியவர்களை விட குழந்தைகள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவார்கள் என்று பலர் பரிந்துரைத்தாலும், இந்தியன் அகாடமி ஆப் பீடியாட்ரிக்ஸ் (ஐ.ஏ.பி) எனப்படும் குழந்தைகளுக்கான மருத்துவ சங்கம் இதனை மறுத்துள்ளது. ‘பெரியவர்கள் மற்றும் வயதான நபர்களைப் போலவே குழந்தைகளுக்கும் இந்த வைரஸ் தொற்றுநோயை உருவாக்கக்கூடியது. ஆனால் கடுமையான நோய் பாதிப்பை ஏற்படுத்தாது. மேலும் மூன்றாவது அலை குழந்தைகளை பிரத்யேகமாக பாதிக்கும் என்பது சாத்தியமில்லாதது’ என்றும் கூறி உள்ளது.

இருப்பினும் சமீபத்திய மாதங்களில் உருமாறிக்கொண்டிருக்கும் வைரஸின் போக்கை கணிப்பது மருத்துவ நிபுணர்களுக்கு சவாலானதாக இருக்கிறது.அதனால் வைரசிடம் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்வதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதுதான் நல்லது. ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றை உள்ளடக்கிய மத்திய ஆயுஷ் அமைச்சகம் குழந்தைகளை தாக்குவதற்கு சாத்தியமான கொரோனா அறிகுறிகளை பட்டியலிட்டுள்ளது. குழந்தைகளுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள சாராம்சங்கள் குறித்து பார்ப்போம்.

தூங்கும் நேரம்: குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு போதுமான நேரம் தூங்க வேண்டும். தூங்கும் நேரம் வயதுக்கேற்ப மாறுபடும்.

1 வயதுக்கும் குறைவான குழந்தைகள்:

12 முதல் 16 மணி நேரம்

1- 2 வயது :

11 முதல் 14 மணி நேரம்

3- 5 வயது:

10 முதல் 13 மணி நேரம்

6- 12 வயது:

9 முதல் 12 மணி நேரம்

டீன் ஏஜ் வயது:

8 முதல் 10 மணி நேரம்

குழந்தைகளில் யாருக்கு அதிக ஆபத்து ஏற்படக்கூடும்?

கொரோனா வைரஸ் தொற்று பொதுவாக குழந்தைகளுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி குறைந்திருந்தால் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் உடல் பருமன், டைப்-1 நீரிழிவு நோய், நாள்பட்ட இதய நோய், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டுடன் இணை நோய் பாதிப்பு கொண்ட குழந்தை களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

குழந்தைகளுக்கு கொரோனா அறிகுறிகள் எப்படிப்பட்டதாக அமைந்திருக்கும்?

4-5 நாட்கள் தொடர்ந்து நீடிக்கும் காய்ச்சல், சாப் பிடும் அளவு குறைந்து போகுதல், ஆக்சிஜன் செறிவு 95 சதவீதத்திற்கும் கீழ் குறைதல், சிறுநீர் வெளியேறும் அளவு குறைவது, சிறுநீர் கழிப்பதில் சிரமம், வழக்கமான சுறுசுறுப்பு இல்லாமல் சோம்பலுடன் காட்சியளித்தல், வயிற்றுப்போக்கு, வாந்தி, அடி வயிற்றில் வலி, கண்கள் சிவத்தல், உடலில் சொறி, எரிச்சல் ஏற்படுவது, மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது. இந்த கொடிய வைரசிடம் இருந்து குழந்தைகளை காப்பாற்றுவதற்கான சிறந்த அணுகுமுறையே வருமுன் காப்பது, சுகாதாரத்தை பின்பற்றுவதுதான் என்று வழிகாட்டுதல் நெறிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் அன்றாட பழக்கவழக்கத்தில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் மாற்றங்கள்:

ஆயுஷ் அமைச்சக வழிகாட்டுதல்களின்படி, குழந்தை நோயை எதிர்த்துப் போராட உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். அதற்காக யோகா, தியானம், பிராணயாமா மற்றும் பிற பயிற்சிகளை செய்யலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அதேவேளையில் குழந்தைகளின் உடல் திறனுக்கேற்ப பயிற்சிகளை செய்வதற்கு ஊக்குவிக்க வேண்டும். கடினமான பயிற்சிகளை மேற்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.

குழந்தைகள் சாப்பிடும் உணவுகள் எளிதில் ஜீரணமாக வேண்டும். அத்தகைய உணவுகளை தேர்ந்தெடுத்து வழங்க வேண்டும். அவை அனைத்து சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவாகவும் அமைந்திருக்க வேண்டும்.

தினசரி வழக்கத்தில் கல்வி, பொழுதுபோக்கு, குடும்பத்துடன் செலவிடும் நேரம், விளையாடும் நேரம் ஆகியவற்றை வரையறை செய்து கொள்ள வேண்டும். முக கவசம் அணிதல், கை, கால்களை தூய்மையாக வைத்திருத்தல், அடிக்கடி சோப், சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற செயல்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். உணவு, தூக்கம், முன்னெச்செரிக்கை நடவடிக்கை மூன்றையும் முறையாக பின்பற்றுவதும் நோய் பாதிப்புகளில் இருந்து குழந்தைகளை தற்காத்துக்கொள்ள உதவி புரியும்.
Tags:    

Similar News