லைஃப்ஸ்டைல்
குழந்தை தொழிலாளர்

குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம்

Published On 2021-06-17 08:11 GMT   |   Update On 2021-06-17 08:11 GMT
சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
இன்று ஓடி விளையாட வேண்டிய இளமையில்- பள்ளிக்கூடம் போக வேண்டிய பருவத்தில் கூலி வேலைக்குச் செல்கின்ற சிறுவர்களைக் கண்டால் நெஞ்சு பொறுக்கவில்லை. அவர்களது நிலையையும் அதனைப் போக்கும் வழி வகைகளையும் இங்கு காண்போம்.

இளமையில் கல் என்பது அவ்வையார் கூறும் அறிவுரை. ஆனால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் வேலைக்கு போவதால் கல்வி பாதிக்கப்படுகிறது. மகிழ்ச்சியான நிலை மாறிவிடுகிறது. பழக்க வழக்கங்களில் பெரும் மாற்றம் ஏற்படுகிறது. மூளை வளர்ச்சி குன்றி சிந்திக்கும் ஆற்றலே இல்லாமல் போய்விடுகிறது.

சத்துணவு, ஓய்வு, சுகாதார வசதி ஆகிய பற்றாக்குறைகளால் பாதிக்கப்படும்
குழந்தை
கள் தொழிற்சாலைகளில் வேலை செய்வதால் ரத்தசோகை, இளைப்பு, காசநோய் ஆகியவற்றிற்கு ஆளாகின்றனர். நுரையீரல் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன. தோல் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

1986-ம் ஆண்டு அரசு குழந்தை தொழிலாளர் சட்டம் இயற்றியுள்ளது. அதன் மூலம் கட்டிட வேலை, சாயம் ஏற்றுதல், நெசவாலை, தீப்பெட்டி தயாரித்தல், சுவரொட்டி ஒட்டுதல், உணவு விடுதிகளில் மேசை சுத்தம் செய்தல் போன்ற பணிகளில் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க நம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தொழிற்சாலைகளில் அவ்வப்போது ஆய்வு செய்து
குழந்தை
தொழிலாளர்களை யாரும் வேலைக்கு வைக்கவில்லை என உறுதி செய்து வருகிறது.

எல்லா குழந்தைகளும் கட்டாயம் கல்வி பெற வேண்டும் என்று ஏட்டளவில் இல்லாது அதனை செயல்படுத்த அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளவேண்டும். பெற்றோர்களும் தாம் பெற்ற குழந்தைகளுக்கு உணவும், கல்வியும் அளிப்பதே கடமை என்று உணரவேண்டும். வறுமையை காரணம் காட்டியோ, பணத்தேவையை காரணம் காட்டியோ குழந்தைகளை வேலைக்கு அனுப்பக்கூடாது. குழந்தைகளின் வருமானம் பெற்றோருக்கு அவமானம் என்பதை உணரவேண்டும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு உதவுவது தொண்டு நிறுவனங்களின் கடமை ஆகும்.

சாலையோரங்களில் தங்கி உள்ள குடும்பங்கள் அன்றாட உணவுக்காக குழந்தைகளை வேலைக்கு அனுப்புகின்ற சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இன்னும் சிலர் குழந்தைகளை பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை தடுத்து அவர்களுக்கு நல்ல அறிவுரை வழங்கி, தினமும் உணவு கிடைப்பதற்கு நமது அரசு நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.

பெற்றோர்கள் எத்தகைய வறுமை வந்தாலும் குழந்தைகளை வேலைக்கு அனுப்புதல் கூடாது. தொழில் நிறுவனங்களும் குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்திக்கொள்ளவேண்டும். இதை கருத்தில் கொண்டு குழந்தைகளை வேலைக்கு அனுப்ப மாட்டோம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்கவேண்டும். மாணவ செல்வங்களாகிய நீங்கள் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
Tags:    

Similar News