பெண்கள் உலகம்
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் சிறுமிகள்

சிறுமிகள் யாரால் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள்

Published On 2021-06-07 12:48 IST   |   Update On 2021-06-07 12:48:00 IST
தற்போது எந்த வயதினர் அதிக அளவில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். அவர்கள் யாரால் பாதிக்கப்படுகிறார்கள்? என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகிறவர்களில் 7 வயதுக்கு உள்பட்ட சிறுமிகள் அதிகமாக இருக்கிறார்கள். பாலியல் என்றால் என்னவென்று தெரியாத குழந்தைளை துன்புறுத்துபவர்கள் பெரும்பாலும் வயதானவர்களாக இருக்கிறார்கள். 60 வயதை கடந்தவர்களும் இதில் அடக்கம். குழந்தைகளுக்கு விருப்பப்பட்ட உணவுகளை வாங்கிக்கொடுப்பதாக ஆசைகாட்டி பெரும்பாலும் இந்த மிருகத்தனத்தை நடத்துகிறார்கள்.

குற்றங்களில் ஈடுபடுபவர்கள் அனேகமாக சம்பந்தப்பட்ட குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் தெரிந்த நபர்களாக இருக்கிறார்கள். அடிக்கடி அந்த குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரோடு பேசி மகிழ்கிறவர்கள், கடைகள், பூங்காக்களுக்கு அழைத்துச்செல்பவர்களாகத்தான் இருப்பார்கள். குழந்தைகள் தனியாக இருக்கும்போது அவர்களிடம் ஒழிந்திருக்கும் மிருகம் விழித்துக்கொள்கிறது. இதை உணர்ந்து பெற்றோர், தங்கள் குழந்தைகளை பாதுகாக்கவேண்டும். இதை நினைத்து எல்லா முதியோர்களையும் தப்பாக பார்க்கக்கூடாது.

வளரிளம் பருவத்து சிறுமிகளுக்கு பருவக்கோளாறால் பல பிரச்சினைகள் வருகிறது. அதில் காதல் தொல்லையும் ஒன்று. 18 வயது நிரம்பாத சிறுமிகள் இதில் அதிக அளவு ஏமாந்து பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதுவும் மிக நெருக்கமானவர்களால்தான் நடக்கிறது. திருமணமாகி மனைவியை பிரிந்த ஆண்கள், மனைவி இருக்கும்போதே மனைவியின் தங்கைகளிடம் சீண்டி விளையாடும் ஆண்கள், பக்கத்து வீட்டில் துடிப்பாக வலம் வரும் சிறுமிகள் மீது கண் வைக்கும் ஆண்கள்தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார்கள்.

சிறுமிகளிடம் அவர்கள் ‘நீ எனது மனைவியைவிட அழகாக இருக்கிறாய்’ என்று ஆரம்பித்துதான் தூண்டில்போடுகிறார்கள். பெற்றோர் இதில் இரண்டுவிதமான மாறுபட்ட நிலைகளை கையாளுகிறார்கள். தங்கள் மகள் யாருடன் பேசுகிறாள் என்பதை கண்காணித்து கண்டிக்காத பெற்றோர் ஒருபுறம் என்றால், மறு புறம் அவள் யாருடன் பேசினாலும் அதை தவறாக சித்தரித்து மகள்களை அடித்து துன்புறுத்தவும் செய்கிறார்கள். ஒவ்வொரு வழக்கிலும் காதல் என்ற பெயரில் தனது உடலை இழந்து கண்ணீர் விட்டு கதறும் குழந்தைகள் கூறுவது ஒன்றேதான். ‘தெரியாமல் செய்துவிட்டேன் என்னை காப்பாற்றுங்கள்’ என்கிறார்கள். பெற்றோர், பாலியல்- காதல்- வாழ்க்கை குறித்து சரியான புரிதல்களை தங்கள் குழந்தை களுக்கு கற்றுத்தர வேண்டும்.

Similar News