லைஃப்ஸ்டைல்
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலும்.. குணப்படுத்தும் வழிமுறையும்

குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலும்.. குணப்படுத்தும் வழிமுறையும்

Published On 2021-05-22 04:21 GMT   |   Update On 2021-05-22 04:21 GMT
குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகிக் கொண்டி ருக்கின்றன. அதிலும் இந்த காய்ச்சலுக்கு குழந்தைகள் பலரும் உயிர் இழந்துள்ள தகவல் மக்களுக்கு ஒருவித பயத்தை உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில் குழந்தைகளுக்கு வரும் டெங்கு காய்ச்சலின் தன்மை, அதிலிருந்து குணமாகும் வழிமுறைகள், கையாள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து பாளையங்கோட்டை யைச் சேர்ந்த குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் வே.த. ராஜேஷ் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டெங்கு காய்ச்சல் என்றால் என்ன?

ஏடீஸ் (Aedis) கொசுக்களால் பரப்பப்படும் ஒருவித வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் டெங்கு காய்ச்சல். இதில் 4 வகை வைரஸ்கள் உண்டு.

1) சாதாரண டெங்கு, 2) தீவிரமான டெங்கு

சாதாரண டெங்கு

இதில் பிறவகை வைரஸ் காய்ச்சலைப் போல மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை காய்ச்சல், உடல்வலி, மூட்டு வலி, தலைவலி மற்றும் கண்களுக்கு பின்னால் வலி போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிகிச்சை எடுத்தாலும் அல்லது எடுக்காவிட்டாலும் குழந்தைகள் எந்தவித பாதிப்புமின்றி குணமடைந்து விடுவார்கள்.

தீவிரமான டெங்கு

முதல் மூன்று அல்லது நான்கு நாட்கள் சாதாரண டெங்கு காய்ச்சலை போன்றே இருக்கும். ஆனால் நான்கு அல்லது ஐந்தாவது நாட்களிலிருந்து குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து காணப்படுவார்கள். இந்த தருணத்தில் அவர்களுக்கு இரத்த பரிசோதனை செய்து பார்த்தால் இரத்த தட்டணுக்கள் (Platelets) குறைவாகவும், இரத்த அணுக்கள் அடர்த்தியாகவும் (Hemoconstration) இருக்கும். குழந்தையின் இரத்த அழுத்தத்தில் குறைவு ஏற்படும். (Circulatory Shock) இரத்த தட்டணுக்கள் மிகவும் குறைந்தால் (> 20,000 v 10000) இரத்தக்கசிவு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளை வீடுகளில் வைத்து பராமரிப்பது எப்படி?

டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கு அடிக்கடி நீராகாரங்களையும், தண்ணீரையும் கொடுத்து கொண்டிருக்க வேண்டும். வாந்தி வருவதாக இருந்தாலும் இவற்றை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு என்னென்ன நீராகாரங்கள் கொடுக்கலாம்?

ஓஆர்எஸ் (oral rehidrations solution) எனப்படும் வாந்தி பேதி நேரத்தில் கொடுக்கும் உப்புக் கரைசல், இளநீர், பழச்சாறுகள், பால், கஞ்சி ஆகியவற்றைக் கொடுக்கலாம். திட உணவுகளை உட்கொண்டால் அவற்றையும் கொடுக்கலாம்.

மருத்துவமனையில் எந்த நிலையில் சேர்க்க வேண்டும்?

குழந்தைகள் நீரோ, நீராகாரங்களையோ அருந்தாமல் இருந்தால், சிறுநீர் கழிக்கும் அளவு குறைந்தால், குழந்தைகள் மிகவும் சோர்வடைந்து மயக்க நிலையில் இருந்தால் அவர்களுக்கு நரம்பு மூலம் நீர்ச்சத்து, உப்புச்சத்து கொடுக்கப்பட வேண்டும்.

எனவே அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வாய், மூக்கு, மலத்துவாரம், பல் வழியாக ரத்தக் கசிவு காணப்பட்டால் கண்டிப்பாக அவர்களை மருத்துவமனையில் கால தாமதம் இல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து விட வேண்டும்.

குழந்தைகள் அனைவருக்கும் ரத்தம் கொடுக்க வேண்டும் என்பது உண்மையா?

உண்மை கிடையாது. எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற வேண்டியிருக்காது. ரத்தக் கசிவு ஏற்படும் குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கைகள் அதிரடியாகக் குறைந்து அபாய நிலையில் உள்ள குழந்தைகளுக்கு ரத்தமோ அல்லது பிளேட்லெட்டுகளையோ ஏற்ற வேண்டி இருக்கலாம்.

ஆண்டிபயாட்டிக் கொடுக்கலாமா? கொடுத்தால் உதவுமா?

டெங்கு காய்ச்சல் வைரஸ் வகை என்பதால் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் உபயோகப்படாது.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

பகல் நேரங்களில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் மட்டுமே இந்த காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே பகல் நேரங்களில் கொசுக்கள் கடிக்காமல் விழிப்புடன் இருக்க வேண்டும். வீடுகள், தெருக்களில் சுத்தமான தண்ணீர் நாள்படத் தேங்காமல் நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

டெங்கு காய்ச்சலால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

டெங்கு காய்ச்சல் வந்த 4 அல்லது 5 நாள்களில் சிலருக்கு மட்டுமே ஷாக்சின்ட்ரோம் விளைவுகள் ஏற்படுகின்றன. ரத்தத்தில் உள்ள நீர் பிளாஸ்மா ரத்தக் குழாயை விட்டு திசுக்களுக்கு இடையே கசிவதால் ரத்த நாளங்களில் உள்ளே இருக்கும் ரத்தத்தின் அளவும், நீர்த்தன்மையும் குறைந்து விடுகிறது. இதனால் ரத்தம் ஓட் டம் குறைபடுவதுடன் ரத்த அழுத்தமும் குறைகிறது.

டெங்கு காய்ச்சலை உறுதி செய்ய ரத்தப் பரிசோதனை உள்ளதா?

1) Card, 2) Eliza, 3) Immunoflorescence, 4) PCR

தற்போதுள்ள பரிசோதனைகள் மூலம் முதல் நாளில் இருந்தே டெங்கு வைரஸ் தாக்குதலை கண்டறிய முடியும்.

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க தடுப்பூசி ஏதும் உள்ளதா?

தற்போது ஏதும் இல்லை. ஆனால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

டெங்கு காய்ச்சல் என்றால் பயப்பட வேண்டுமா?

எல்லா டெங்கு காய்ச்சலுக்கும் பயப்பட வேண்டியது இல்லை. ஒரு வயதுக்கு கீழுள்ள குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் தீவிரமாக இருந்தால் அவர்களை தொடக்க நிலையிலேயே மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவது நல்லது. சரியான நேரத்தில் மருத்துவரிடம் குழந்தைகளை காண்பிப்பதன் மூலம் நாம் பயப்படாமல் இருக்கலாம்.

டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறாமல் தொக்கம் எடுப்பது, கயிறு கட்டுவது, சீர் தட்டுவது என்றெல்லாம் மூட நம்பிக்கைகளில் இறங்கக் கூடாது.

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நீராகாரங்களை கொடுத்து, உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெறுவதன் மூலம் குணம் பெற முடியும்.

குழந்தைகள் மருத்துவ நிபுணர், முத்தமிழ் மருத்துவமனை, குழந்தைகள் நல சிறப்பு சிகிச்சை மையம், 59, திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை. தொலைபேசி: 0462- 2560783, 2570783, 9486559911.
Tags:    

Similar News