லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்

தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள்

Published On 2021-04-16 03:29 GMT   |   Update On 2021-04-16 03:29 GMT
தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
தற்போது பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுகள் தொடங்க உள்ளது.  தேர்வை கண்டு பயப்படக்கூடாது. நாம், கடந்த ஓராண்டாக படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது. ஆகவே, பயப்படாமல் தேர்வு எழுதுங்கள். சரி, தேர்வுக்கு முன் செய்ய வேண்டிய-வேண்டாத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.

* ‘தேர்வு‘ என்கிற அச்சமின்றி நிதானமாக தன்னம்பிக்கையுடன் எழுதுங்கள். அடுத்த நாள் தேர்வுக்கான பாடங்களை படிப்பதில் மட்டும் கவனம் செலுத்துங்கள். இடைவேளை நாட்களை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்.

* படிக்கும் வேளையில் குழுவாக சேர்ந்து படித்தால் உற்சாகமாக இருக்கும். சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம். குழுவாக படிக்க முடியாவிட்டால் தேர்வு முடியும் வரை பெற்றோரை அல்லது சகோதரர்களை உதவிக்கு அழைத்து கொள்ளலாம்.

* இரவு 11 மணிக்கு மேல் விழித்திருந்து படித்தால், காலை தேர்வு மையத்தில் சோர்வை ஏற்படுத்தும். ஆகவே, வழக்கமாக தூங்க செல்லும் நேரத்திற்கு ஓய்வெடுக்க சென்று விட வேண்டும். அதிகாலை சீக்கிரமாக எழுந்து படிக்கலாம்.

* நாளைய தேர்வுக்கான உபகரணங்களை முந்தைய நாள் இரவே தயார் படுத்த வேண்டும். கூடுதலாக இன்னொரு பேனா வைத்திருப்பது நல்லது. பள்ளி அடையாள அட்டை, தேர்வு அடையாள அட்டை, பஸ் பயண அட்டை ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்து செல்லுதல் வேண்டும்.

* எளிதில் ஜீரணம் ஆகும் காய்கறி உணவுகள், பழங்களை சாப்பிட வேண்டும். படிக்கும்போது சோம்பல் ஏற்பட்டால் சூடான பானம் அல்லது பழச்சாறு அருந்தலாம். கிரிக்கெட் விளையாடுவது, மோட்டார் சைக்கிள் சாகசங்களில் ஈடுபடுவது, கிணற்றில் குதித்து குளிப்பது, மரங்களில் ஏறி விளையாடுவது போன்ற காயம் ஏற்பட வாய்ப்புள்ள செயல்களில் ஈடுபடக்கூடாது. படிக்கும்போது ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து நடத்தல் வேண்டும்.

* படிக்காத பாடங்கள் நிறைய இருப்பதாக புலம்பி கொண்டிருக்க கூடாது. படித்த பாடங்களை திரும்ப நினைவுபடுத்தி படித்தாலே போதுமானது. அவசியமான காரியங்களுக்கு மட்டும் நேரத்தை செலவிட வேண்டும். செல்போனில் விளையாடுவது, டி.வி.பார்ப்பது போன்றவற்றை தவிர்த்தல் வேண்டும்.

* குறிப்பாக, தேர்வு நன்றாக எழுதவில்லை என்று நண்பர்களிடம் புலம்பக்கூடாது. அடுத்த தேர்வை சிறப்பாக எழுவது பற்றி சிந்திக்க வேண்டும். தன்னம்பிக்கையோடு தேர்வு எழுதுங்கள். தேர்வு முடிந்து விடுமுறை நாட்களில் பெற்றோருடன் பயனுள்ள வகையில் ஆன்மிக சுற்றுலா, கல்வி சுற்றுலா செல்லலாம்.
Tags:    

Similar News