லைஃப்ஸ்டைல்
குழந்தைகளை திட்டாதீங்க

குழந்தைகளை பயந்தாங்கொள்ளி என்று திட்டாதீங்க... ஏன் தெரியுமா?

Published On 2021-04-06 07:22 GMT   |   Update On 2021-04-06 07:22 GMT
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம்.
குழந்தைகள் மீது கோபம் வரும்போதும், மற்றவர்கள் விரும்பியதுபோல் அவர்கள் செயல்படாதபோதும் அவர்களை காயப்படுத்தும் வார்த்தைகளை பிரயோகப்படுத்திவிடுகிறோம். வாயாடி.. சண்டைக்காரன்.. திருடன்.. பொய் பேசுகிறவன்.. பிடிவாதக்காரன்.. சுயநலவாதி.. என்பது போன்ற வார்த்தைகள் அவர்களை நோக்கி அதிகமாக பயன்படுத்தக்கூடியவைகளாக இருக்கின்றன. இப்படிப்பட்ட `வார்த்தை முத்திரை' குத்தப்படுவது, அவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறை கலந்த தவறாகும். அது அவர்களை காயப்படுத்திவிடும்.

குழந்தைகள் மீது இத்தகைய தவறான முத்திரைகளை குத்தும் பெற்றோர் இரண்டு விதமான தவறுகளை செய்கிறார்கள். குழந்தையிடம் அப்படிப்பட்ட பழக்கம் உருவாக என்ன காரணம் என்பதை கண்டறியாமல் இருப்பது முதல் தவறு. அந்த பழக்கத்தில் இருந்து குழந்தையை மீட்க முயற்சிக்காமல், அதையே சொல்லி குற்றஞ்சாட்டுவது இரண்டாவது தவறாகும். பெற்றோர் செய்யும் இந்த இரண்டு தவறுகளும் அந்த குழந்தைகளின் எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கக்கூடியதாகும்.

5 முதல் 15 வயதுக்குட்பட்ட காலகட்டம் சிறுவர்- சிறுமியர்களை பொறுத்தவரையில் மிக முக்கியமானது. அப்போது அவர்களிடம் சில நடத்தைச் சிக்கல்கள் தோன்றும். அதை உணர்ந்து அவர்களை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், சரியாக வழிகாட்ட பெற்றோர்கள் முயற்சிக்கவேண்டும்.

`அய்யோ.. அம்மா இங்கே ஓடி வா..' என்று சிறுவன் அலறியபடி அழைப்பான். எல்லா வேலைகளையும் அப்படியே போட்டுவிட்டு அம்மா ஓடிவந்து பார்த்தால், அங்கே ஒரே ஒரு கரப்பான் பூச்சி நின்றுகொண்டிருக்கும். `இதற்கா இவ்வளவு பயந்தாய்? நீ சரியான பயந்தாங்கொள்ளி' என்று அம்மாக்கள் சொல்வதுண்டு.

தனது குழந்தையை பயந்தாங்கொள்ளி என்று அம்மா சொல்லிவிட்டு அதோடு மறந்துவிடுவார். அவரைப் பொறுத்தவரையில் அந்த பிரச்சினை அப்போதே தீர்த்துவிடும். ஆனால் பயந்த அந்த குழந்தையிடம் அப்போதுதான் பிரச்சினையே தொடங்கும்.

எதிர்காலத்தில் எது தன்னை பயமுறுத்தினாலும், அம்மா ஏற்கனவே சொன்ன `பயந்தாங்கொள்ளி' என்ற வார்த்தைதான் உடனே அவனது நினைவுக்கு வரும். அதனால் தாயிடம் மட்டுமின்றி யாரிடமும் தனது பயத்தை வெளிப்படுத்தாமல், பயத்தை தனக்குள்ளே புதைத்துக்கொள்வதால் எதிர்காலத்திலும் பயம் அவனிடமிருந்து விலகாமல் அப்படியே இருந்துவிடும்.

பயம் கொண்ட குழந்தைகளை அதை கூறி கிண்டல் அடிப்பதோ, கேலி செய்வதோ அவர்களை தைரியமானவர்களாக மாற்றாது. மாறாக தங்களை பயந்தாங்கொள்ளி, தைரியமற்றவர்கள் என்று முடிவுசெய்து தங்களை தாங்களே மன அழுத்தத்திற்குள்ளாக்கிக் கொள்வார்கள்.

குழந்தைகளுக்கு பயம் எப்படி எல்லாம் உருவாகுகிறது- ஏன் உருவாகிறது என்பதை கண்டறிந்து, அதன் உண்மைத்தன்மையை விளக்கி, அந்த பயத்தில் இருந்து அகல வழிகாட்டவேண்டும். சைக்கிள் மிதித்தல், ஸ்கேட்டிங் செய்தல் போன்றவைகளில் ஈடுபட குழந்தைகள் ஆசைப்பட்டால் பயமுறுத்தி அவைகளில் ஈடுபடக்கூடாது என்று சொல்லக்கூடாது. எப்போதுமே குழந்தைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் ஊட்டவேண்டும்.
Tags:    

Similar News