லைஃப்ஸ்டைல்

குழந்தைகளே கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுவோம்

Published On 2019-05-06 03:13 GMT   |   Update On 2019-05-06 03:13 GMT
தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம் என்று பார்க்கலாம்.
படிப்பு, இதுவும் ஒருவகை உழைப்பு போன்றது தான். ஒரு விவசாயி, விதைத்த விதைக்கு, உழைப்புக்கு ஒரு வருடம் கழித்து நல்ல பலன் கிடைப்பது போல, தாங்கள் பள்ளி வகுப்பறையில் ஒரு வருடம் படித்த படிப்புக்கு பலன் கிடைக்கப்போகிறது. ஆம். ஒரு வகுப்பில் இருந்து இன்னொரு வகுப்புக்கு செல்ல போகிறீர்கள். தேர்வும் எழுதி முடித்து விட்டோம். தற்போது எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-டூ போன்ற அரசு பொதுத்தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வு அல்லாத வகுப்பு மாணவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறார்கள். தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. ஏறக்குறைய ஒரு மாதத்துக்கும் மேலாக விடுமுறை இருக்கிறது. இந்த விடுமுறையை பயனுள்ள வகையில் எப்படி கொண்டாடலாம். தங்களது உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று அவர்களோடு நலம் விசாரித்து கொண்டாடலாம்.

தங்களது பெற்றோரோடு, அண்ணன்-தங்கையோடு சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்களுக்கு சென்று கொண்டாடலாம். ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற குளிர்ச்சி தரும் இடங்களுக்கு சென்று அங்குள்ள முக்கியமான இடங்கள், பூங்காக்கள் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். தலைநகர் சென்னைக்கு சென்று அங்குள்ள மறைந்த தலைவர்களின் நினைவிடங்கள், அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள மியூசியம், முக்கியமான நூலகங்களுக்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

கன்னியாகுமரி கடலில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரியன் உதிக்கும், மறையும் நேரம் ஆகியவற்றை கண்டு ரசிக்கலாம். திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள முக்கியமான ஆன்மிக தலங்களுக்கும், முக்கொம்பு, வண்ணத்துப்பூச்சி பூங்கா, கல்லணை போன்ற பூங்காக்களுக்கும் குடும்பத்தினரோடு சென்று மகிழலாம். அப்போது முக்கொம்பு, கல்லணை போன்றவற்றின் கட்டிட அமைப்புகள், விவசாயத்துக்கு எவ்வாறு தண்ணீர் பிரித்து அனுப்பப்படுகிறது என்று அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

நாம், இன்று நகரத்தில் வசிக்கலாம். ஆனால், நம் பெற்றோர் விவசாய குடும்பத்தை சார்ந்தவர்களாக, கிராமத்தில் வசித்தவர்களாக இருக்கலாம். அப்படி உள்ள மாணவர்கள் நம் பெற்றோர் வசித்த கிராமங்களுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலையை அறிந்து கொள்ளலாம். கிராம மக்களுடன் சகஜமாக பேசி பழகலாம். கிராம மக்களுக்கு உதவிகள் செய்யலாம். அவர்களுக்கு பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆகவே, இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கொண்டாடுங்கள் மாணவ செல்வங்களே...
Tags:    

Similar News