லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் உடல் நலம் காப்போம்

Published On 2018-03-19 03:31 GMT   |   Update On 2018-03-19 03:31 GMT
குழந்தைகளின் உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தும் முழு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் மிகவும் அவசியம்.
இன்றைய காலத்தில் விளையாட்டு என்பது பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களும் இருப்பதில்லை. உடல், உள்ளம், ஆன்மா என அனைத்தும் முழு வளர்ச்சி பெற வேண்டுமென்றால் உடற்பயிற்சியும், விளையாட்டும் மிகவும் அவசியம். ‘ஓடி விளையாடு பாப்பா’ என்று பாரதியார் விளையாட்டின் அவசியம் உணர்ந்து பாடியுள்ளார். இன்றுள்ள குழந்தைகளும் விளையாட ஆவலாக உள்ளார்கள். எப்படி தெரியுமா? கணினியிலும், செல்போனிலுமே விளையாட ஆர்வம் காட்டுகிறார்கள். யாரைக் குற்றம் சொல்வது?

பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் தெருவிற்கு செல்வதையும், மண்ணில் விளையாடுவதையும் விரும்பாமல் குழந்தைகளை வீட்டிற்குள்ளே பொத்தி பொத்தி வளர்த்து கூண்டு கிளிகளாக மாற்றி வருகிறார்கள். விளைவு, மாணவர்கள் பிராய்லர் கோழிகளாக வளர்ந்து உடல் உபாதைகளுடன் காணப்படுகின்றனர்.

வளர்ந்த பெரியவர்களும் உடற்பயிற்சி இன்றி ரோபோக்கள் போல் செயல்படுவதால் பல நோய்கள் உடம்பில் குடியேறி குடும்பம் நடத்த ஆரம்பித்து விடுகிறது. அதன் பின்னர் தான் இவர்கள் ஓடோடிச் சென்று நடைப்பயிற்சியும் மேற்கொள்கிறார்கள். காலத்தில் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகளை காலம் கடந்த பிறகு செய்ய முயன்று தோற்றுப் போய் முடங்கி விடுகிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளை நன்றாக விளையாடுவதற்கு அனுமதிக்க வேண்டும். கணினி, செல்போன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை குழந்தைகள் உணரும்படியாக எடுத்துச் சொல்லி நல்வழிப்படுத்தி, உடற்பயிற்சியிலும், விளையாட்டிலுமே நலமான வாழ்வு கிடைக்கும் என்பதை புரிய வைக்க வேண்டும். நடந்துச் சென்றும், சைக்கிளில் சென்றும் முன்பு செய்து முடித்த வேலைகளுக்கு, இப்போது மோட்டார் சைக்கிள், கார், பஸ் போன்ற வாகனங்களை தேடுகிறோம். அன்று பணம் மிச்சமானதோடு, உடலும் பலம் பெற்றது.

நீந்துவதற்கு இருந்த ஏரி, குளத்தின் மீது அடுக்குமாடி கட்டி அண்ணாந்து பார்த்து அதிலே ‘சவர் பாத்’ குளியல் போடுகிறோம். படிக்கட்டில் பாதம் பதித்து நடந்தால் கால் வலிக்கும் என லிப்ட் வைத்து விட்டோம். உடல்நலன் சார்ந்த பயிற்சிகள் அனைத்தும் எந்திரங்களின் வரவால் நம்மை சோம்பேறிகளாக மாற்றியதோடு உடல் நலத்தையும் சேர்த்தே கெடுத்து விட்டன. உயிருக்கு ஆதாரம் உடம்பு அந்த உடம்பை காப்போம்.

-பழனி
Tags:    

Similar News