லைஃப்ஸ்டைல்

குழந்தைகளின் உடலை பாதிக்கும் நொறுக்குத்தீனி

Published On 2018-02-02 05:44 GMT   |   Update On 2018-02-02 05:44 GMT
குழந்தைகளின் உணவு விஷயத்தில் பெற்றோர் கவனம் செலுத்துவதுடன் குழந்தைகள் நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும்.
குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கற்றுக்கொடுத்து, அதற்கு அவர்களை மாற்றுவது எல்லாப் பெற்றோருக்குமே பெரும் போராட்டமாக இருக்கிறது. பரபரப்பான வாழ்க்கை முறை, கூட்டுக்குடும்பம் இல்லாமல் போனது, தாய்மார்கள் வேலைக்கு செல்வது இன்னும் பல காரணங்களால் இந்தப் பிரச்சனை நீடிக்கிறது.

நொறுக்குத்தீனிகள் கலோரிகள் இல்லாமல் வெறும் சர்க்கரையையும் உப்பையும் கொண்ட வெற்று கலோரிகளை உடலுக்கு அளிக்கிறது. சரிவிகித உணவோ உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை சரியான அளவில் அளிக்கிறது.

நொறுக்குத்தீனியில் அதிக சர்க்கரை இருப்பதால், குழந்தைகளின் வலிமை குறையும், இதனால் குழந்தைகள் சோர்வாகவும், தெம்பின்றியும் காணப்படலாம். இதனால், அவர்கள் எதிலும் மனதைச் செலுத்த முடியாமல் சிரமப்படலாம், படிப்பிலும் பிற தினசரி செயல்பாடுகளிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். இவற்றில் உள்ள அதிக கொழுப்பால், உடலில் கொலஸ்டிராலும் ட்ரைகிளிசரைடும் அதிகரித்து, குழந்தைகளில் உடல் பருமன் ஏற்படலாம்.



தேவையற்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் பழக்கம் நெடுநாள் நீடித்தால், அதனால் பல்வேறு நோய்கள் ஏற்படலாம்.

ஆரோக்கியமான உணவுகளை குழந்தைகளைக் கவரும் விதத்தில் காட்சிப்படுத்துங்கள், அவை வண்ணமயமாக இருக்கட்டும், உதாரணமாக, காய்கறிகளையும் பழங்களையும் கொண்டு அலங்காரமான சேலட் செய்யலாம். உணவில், மாவுச்சத்து, கொழுப்பு, புரதம், கால்சியம் போன்ற எல்லா சத்துகளும் சரியான அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும்.

சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்கவும். குழந்தைகள் பெரும்பாலும் விளம்பரங்களைப் பார்த்தே, இதுபோன்ற நொறுக்குத்தீனிகளை சாப்பிடும் பழக்கத்தில் விழுகிறார்கள் என்று கருதப்படுகிறது. ஆகவே, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து, தொடர்ந்து நொறுக்குத்தீனிகளை சாப்பிடுவது ஏன் கெடுதல், எப்படி கெடுதல் என்று அவர்களுக்கு விளக்கிப் புரிய வைக்கவும். எல்லாவற்றுக்கும் மேல், நாம் தான் அவர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட வேண்டும். ஆகவே முதலில் நாம் திருந்த வேண்டும்!
Tags:    

Similar News