லைஃப்ஸ்டைல்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அவசியம்

Published On 2018-01-24 04:16 GMT   |   Update On 2018-01-24 04:16 GMT
ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
போலியோ இல்லாத உலகத்தை உருவாக்க, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கட்ட  சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான முதற்கட்ட சொட்டு மருந்து முகாம், ஜனவரி 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து மார்ச் 11-ம் தேதி இரண்டாம் கட்ட முகாம் நடத்தப்படவுள்ளது. 

இளம்பிள்ளை வாதம் உங்கள் குழந்தைக்கு வராமல் தடுக்க, எளிமையான வழிகள் பலஉள்ளன. குழந்தை பிறந்த பிறகு, 6, 10 மற்றும் 14-வது வாரங்களில் தவறாமல் சொட்டு மருந்து கொடுப்பது அவசியம்; அதன் பின்னர், ஒன்றரை வருடத்திலும், குழந்தைக்கு 5 வயதாகும்போதும் போலியோ சொட்டு மருந்து கண்டிப்பாக அளிக்க வேண்டும்.

ஏற்கெனவே போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 



போலியோ எனப்படுகிற வைரஸ் தொற்று, வாந்தி, தலை மற்றும் தசைவலி, காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் தென்படுவதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

போலியோவால் தாக்கப்பட்ட குழந்தைகளின் உடலில் ஒரு பகுதி தளர்ச்சி அடையும் அல்லது செயல்படாதவாறு முடம் ஆகலாம். பெரும்பாலும், இளம்பிள்ளை வாதம் ஒரு காலிலோ, இரண்டு கால்களிலோ வரலாம். நாட்கள் செல்லச்செல்ல முடங்கிய கால், மற்ற காலினைப் போல், சீராக வளராமல் சூம்பி காணப்படும்.

போலியோவால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு அவசியம் ஏற்பட்டால் ஒழிய அனாவசியமாக எந்த மருந்தும் கொடுக்கக் கூடாது. கட்டாயத் தேவை இருந்தால் மட்டுமே ஊசி போடலாம். அவசியம் இன்றி போடப்படும் ஊசியால் இந்நோயின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

மழலைப் பருவத்தை ஒட்டுமொத்தமாக முடக்கும் இளம்பிள்ளை வாதத்தைத் தடுக்கும் ஆற்றல் தாய்ப்பாலுக்கு உள்ளது. எனவே, இளம் தாய்மார்கள் கூடுமான வரை தொடர்ந்து குழந்தைகளுக்குப் பால் கொடுப்பதைத் தவிர்க்கக் கூடாது. 
Tags:    

Similar News