லைஃப்ஸ்டைல்

மாணவர்களின் சுமையை இறக்கி வைக்குமா பள்ளிகள்?

Published On 2018-01-17 03:10 GMT   |   Update On 2018-01-17 03:10 GMT
எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு, அவர்களுடைய முதுகெலும்பும் பாதிப்படைகிறது.
பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு செல்லும்போது அவர்கள் சுமந்து செல்லும் புத்தக மூட்டையை பார்த்தால் ஐயோ பாவம் என்று சொல்லத் தோன்றும். அந்த அளவுக்கு ஒரு குட்டி சாக்கு மூட்டையையே எடுத்துச்செல்கிறார்கள். குழந்தைகளின் எடையை விட அவர்கள் படிக்கும் பாட புத்தகங்களின் எடை அதிகமாக இருக்கிறது. 

அளவுக்கு அதிகமான பாடப்புத்தகங்களை சுமந்து செல்லும் குழந்தைகளுக்கு முதுகு வலி, கழுத்து வலி உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என்று ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. குறிப்பிட்ட எடைக்கு அதிகமாகவே மாணவர்கள் தங்கள் புத்தக பையை சுமப்பதால் கூன் விழுவதோடு, அவர்களுடைய முதுகெலும்பும் பாதிப்படைகிறது.

தமிழகத்தில் புத்தக பை சுமையை குறைப்பதற்கு 3 பருவங்களாக பிரித்து புத்தகங்கள் கொடுக்கப்படுகிறது. இது ஓரளவுக்கு வசதியாக உள்ளது. டெல்லியில் செயல்படுத்த இருப்பதுபோன்று தமிழகத்திலும் வாரத்தில் ஒரு நாள் புத்தகம் இல்லா கல்வியை கல்வித்துறை வழங்கினால், மாணவ-மாணவிகள் தூக்கி வரும் நோட்டு-புத்தக பாரத்தை கொஞ்சம் இறக்கி வைக்கலாம். 

தேவையான புத்தகங்களை மட்டும் மாணவர்கள் கொண்டுவருவதற்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும். மேலும் பள்ளிகளிலேயே நோட்டு-புத்தகங்கள் வைப்பதற்கு லாக்கர் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க பள்ளி நிர்வாகங்கள் முன்வர வேண்டும். இவ்வாறு செய்தால் மாணவர்களும் உற்சாகத்தோடு வந்து கல்வியை கற்பார்கள்.

முன்பெல்லாம் மாணவர்களுக்கு கல்வியோடு ஒழுக்கத்தையும் கற்று தரும் நீதி போதனை வகுப்புகளில் கதைகள் மூலம் நல்ல அறிவை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவார்கள். தற்போது அந்த நீதிபோதனை வகுப்புகள் பெரும்பாலான பள்ளிகளில் கற்றுக்கொடுக்கப்படுவது இல்லை. 

எனவே வாரத்தில் ஒரு நாளாவது மாணவர்கள் தூக்கி செல்லும் புத்தக பைக்கு விடுப்பு கொடுத்து, அவர்களின் பாரத்தை இறக்கிவைப்பதோடு, அன்றைய தினம் முழுவதும் மாணவர்களின் பிற திறமைகளை வளர்க்கவும், நீதிபோதனை வகுப்புகள் நடத்தியும் செலவிடலாம் என்பது பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

-சாய் விஹான்.
Tags:    

Similar News