லைஃப்ஸ்டைல்

அமைதியாகத் தூங்கட்டும் அன்புக் குழந்தைகள்

Published On 2017-10-26 09:04 GMT   |   Update On 2017-10-26 09:04 GMT
குழந்தைகள் இரவில் நிம்மதியாக தூங்கவில்லை என்றால் பெற்றோர் தவித்துவிடுவார்கள். இரவில் தூங்க மறுக்கும் குழந்தைகளை, எளிதில் தூங்க வைக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.
பச்சிளங் குழந்தைகள் விளையாடும்போதும், சிரிக்கும் போதும் பார்க்க அழகாக இருக்கும். ஆனால் அவை இரவில் நிம்மதியாக தூங்கவில்லை என்றால் அவ்வளவுதான் குழந்தையின் பெற்றோர் தூக்கமின்றி தவித்துவிடுவார்கள்.

நாள் முழுவதும் வேலை செய்த களைப்போடு இரவில் தூங்கச்செல்லும் அவர்கள், குழந்தைகள் தூங்காமல் சதா அழுதுகொண்டேயிருந்தால் கோபமடையவும் செய்வார்கள். அதற்காக குழந்தையை அடித்தோ மிரட்டியோ தூங்கவைக்க முற்படக்கூடாது. தூக்கமின்மை என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் பாதிக்கும் விஷயம்.

நமக்கு இருக்கும் வேலைகளின் அவசரத்தில் தூங்கு, தூங்கு என அதட்டியோ, வேகவேகமாக தொட்டிலை ஆட்டியோ தூங்க வைத்தால் குழந்தைகள் தூங்காது. அதட்டல் பயத்திலேயே தூக்கத்தை மறந்து அழ ஆரம்பித்துவிடும். அப்படி இரவில் தூங்க மறுக்கும் குழந்தைகளை, எளிதில் தூங்க வைக்கும் டிப்ஸ் இதோ...!

* குழந்தைகளை பகல்வேளையில் விளையாட வைத்துவிட்டு, மாலையில் அவர்களை தூங்க வைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால், இரவில் தூங்காமல் விளையாடிக் கொண்டே இருப்பார்கள்.



* தினமும் ஒரே மாதிரியான செயல்பாடுகளை பின்பற்றினால், குழந்தைகள் அதற்கேற்றாற்போல் தங்களை விரைவில் மாற்றிக் கொள்வார்கள்.

* இரவு நேரத்தில் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் குளிப்பாட்டி விட்டால், அவர்களுக்கு தானாகவே தூக்கம் வந்து விடும்.

* தனிமை பயமின்றி தாயின் அரவணைப்பு கிடைத்தால் எப்பேற்பட்ட குழந்தையும் விரைவில் தூங்கிவிடும்.

* கதைகள் கேட்கும்போது குழந்தைகளின் கவனம் ஒரே இடத்தில் குவிந்து மனநிலை அமைதியாகும். அப்போது சீக்கிரமே தூங்கிவிடுவார்கள். பெற்றோருடனும் குழந்தைக்கு இருக்கும் உறவும் இதன் மூலம் சிறப்படையும். குழந்தைக்கு மனோவளர்ச்சியும் ஏற்படும்.

* மென்மையாக தாலாட்டுப் பாடினால், அவர்கள் அதைக் கேட்டுக் கொண்டே தூங்கி விடுவார்கள்.

* குழந்தைகளை தினமும் ஒரே இடத்தில் தூங்க வைப்பது நல்லது. தலையை மென்மையாக கோதிவிடுவது, தட்டிக் கொடுப்பது போன்ற செயல்களால் அம்மாவின் அரவணப்பை உணர்ந்து குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அதே சமயம் எல்லா சூழ்நிலையிலும் குழந்தையை தூங்கவும் பழக்கவேண்டும். அதாவது தொட்டில், மெத்தை, தரை விரிப்பு, மடி என்று எல்லா இடத்திலும் குழந்தையை தூங்கச்செய்யவேண்டும். குழந்தை அதற்கு பழகிக்கொண்டால் மட்டுமே அதனை எல்லா இடத்திற்கும் எடுத்துச்செல்ல முடியும்.
Tags:    

Similar News