கால்பந்து

மகளிர் கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டி - ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்

Published On 2023-08-19 23:48 GMT   |   Update On 2023-08-19 23:48 GMT
  • உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை.

சிட்னி:

9-வது மகளிர் உலக கோப்பை கால்பந்து போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 32 நாடுகள் பங்கேற்றன.

இந்நிலையில், மகளிர் உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி இன்று நடக்கிறது. சிட்னி மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஸ்பெயின், இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இரு அணிகளும் சமபலத்துடன் திகழ்வதால் இறுதிப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள இங்கிலாந்து இந்த தொடரில் தோல்வியை சந்திக்கவில்லை. இங்கிலாந்து லீக் சுற்றில் ஹைதி (1-0), டென்மார்க் (1-0), சீனா (6-1) ஆகிய அணிகளை வென்று இருந்தது. 2-வது சுற்றில் நைஜீரியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் 4-2 என்ற கோல் கணக்கிலும், கால் இறுதியில் கொலம்பியாவை 2-1 என்ற கோல் கணக்கிலும், அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை 3-1 என்ற கணக்கிலும் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 3-வது இடத்தை பிடித்ததே சிறந்த நிலையாகும். 2015-ல் அரை இறுதியில் தோற்று 3-வது இடத்தைப் பிடித்தது. முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது.

6-வது வரிசையில் இருக்கும் ஸ்பெயின் அணி ஒரே ஒரு ஆட்டத்தில் தோற்று இருந்தது. லீக் ஆட்டத்தில் 0-4 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்று, கோஸ்டாரிகாவை 3-0 என்ற கணக்கிலும், ஜாம்பியாவை 5-0 என்ற கணக்கிலும் வென்று இருந்தது. 2-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை 5-1 என்ற கணக்கிலும், கால்இறுதியில் நெதர்லாந்தை 2-1 என்ற கணக்கிலும், அரை இறுதியில் சுவீடனை 2-1 என்ற கணக்கிலும் வீழ்த்தியது.

ஸ்பெயின் அணி இதற்கு முன்பு கால் இறுதி வரையே நுழைந்து இருந்தது. தற்போது முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இரு அணிகளும் இதுவரை உலக கோப்பையை வென்றதில்லை. இதனால் உலக சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது ஸ்பெயினா, இங்கிலாந்தா என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News