வழிபாடு

அனுமனை வணங்கினால் ஆனந்தமான வாழ்வு அமையும்: சிவல்புரி சிங்காரம் பேச்சு

Published On 2022-08-01 04:20 GMT   |   Update On 2022-08-01 04:20 GMT
  • ராமர்-சீதையை இணைத்து வைத்தவர் அனுமன்.
  • அனுமனை வணங்குவதால் ஆனந்தமான வாழ்வு அமையும்.

காரைக்குடி அருகில் உள்ள வ.சூரக்குடியில் உள்ள சிவ ஆஞ்சநேயர் கோவிலில் 17-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை ஜோதிடக்கலைமணி சிவல்புரி சிங்காரம் தலைமையில் நடைபெற்றது. விழாவில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். மேலப்பனையூர் கார்த்திக் குருக்கள் திருவிளக்கு பூஜையை நடத்தினார்.

காரைக்குடி மாணிக்கம் முன்னிலை வகித்தார். அலர்மேலுமங்கை சீனிவாசன் இறைவணக்கம் பாடினார். செட்டிநாடு கிரிவலக்குழு தலைவர் சிவல்புரிசிங்காரம் "சொல்லின் செல்வன் அனுமன்" என்ற தலைப்பில் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- அனுமனை வணங்குவதால் ஆனந்தமான வாழ்வு அமையும். பிணி தீர்க்கும் ஆற்றல் அனுமன் வழிபாட்டிற்கு உண்டு. அதுமட்டுமல்லாமல் பிரிந்தவரை இணைத்து வைக்கும் ஆற்றலும் உண்டு. ஆரோக்கிய தொல்லையில் அவதிப்படுபவர்கள் அனுமனை வழிபட்டு மருத்துவ ஆலோசனை பெற்றால் விரைவில் நோய் குணமாகும்.

ராமர்-சீதையை இணைத்து வைத்தவர் அனுமன். எனவே தம்பதியர் கருத்து வேறுபாடு அகலவும், பிரிந்த தம்பதியர் பிரச்சினைகள் தீர்ந்து இணையவும் அனுமன் வழிபாடு தேவை.

குழந்தைகளுக்கு பேச்சாற்றல் சிறப்பாக அமைய யோகபலம் பெற்ற நாளில் அனுமன் தலங்களுக்கு சென்று வழிபடலாம். இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற இதுபோன்ற விளக்கு பூஜையில் கலந்து கொள்வது நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக சிவல்புரி சிங்காரத்திற்கு, கோவில் நிர்வாகி முத்துராமன் பொன்னாடை அணிவித்தார். விழாவில் கோனாபட்டு அழகு, ஆலத்துப்பட்டி ஷர்மிளா பாலமுருகன், ஆத்தங்குடி கார்த்திக், ஸ்ரீராம், தாரகை ஸ்ரீ, அரசி, மதுரை சீதாலட்சுமி, சூரை கார்த்திகா, வேந்தன்பட்டி சீனிவாசன், காரை ராமநாதன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி முத்துராமன், செல்வி ஆகியோர் செய்திருந்தனர். இதைதொடர்ந்து வள்ளி திருமணம் நாடகமும், மாட்டுவண்டி பந்தயமும் நடந்தது.

Tags:    

Similar News