உலகம்

800 கோடியை எட்டும் உலக மக்கள் தொகை

Published On 2022-11-14 02:45 GMT   |   Update On 2022-11-14 02:46 GMT
  • இனி, 800 கோடியில் ஒருவர் நாம்.
  • நாளை உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.

நியூயார்க் :

நாம் வசிக்கும் இந்த மாபெரும் பூமியின் மக்கள்தொகை எகிறிக்கொண்டே செல்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) உலக மக்கள்தொகை 800 கோடி ஆகப்போகிறது.

ஐ.நா.வின் புதிய மக்கள்தொகை மதிப்பீட்டில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக இனி, 800 கோடியில் ஒருவர் நாம்!

பூமியில் மனிதர்களின் எண்ணிக்கை 800 கோடி ஆகப்போகும் தகவல், கடந்த ஜூலை 11-ந் தேதி, ஐ.நா.வால் வெளியிடப்பட்டது. உலக மக்கள்தொகை தினமான அன்றைய நாளில் வெளியான ஐ.நா. உலக மக்கள்தொகை வாய்ப்பு 2022 அறிக்கையில் அந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கை இன்னும் 2 நாட்களில் எட்டப் போகிறோம்.

பூமிப்பந்து, மக்கள்தொகையால் பிதுங்கி வழிவது கொஞ்சம் பீதி ஏற்படுத்தினாலும், ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் நம்பிக்கையோடு பேசுகிறார்...

'நமது பன்முகத்தன்மையை கொண்டாடுவதற்கான, பொது மனிதநேயத்தை அங்கீகரிப்பதற்கான, வாழ்நாளை நீட்டித்து, மகப்பேறுகால மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்துள்ள மருத்துவத்துறையின் மகத்துவத்தை போற்றுவதற்கான நேரம் இது' என்கிறார்.

அதேநேரம் ஐ.நா. பொதுச் செயலாளர் கூறும் முக்கியமான எச்சரிக்கை இது...

'உலக மக்கள்தொகை 800 கோடியை எட்டுவது, நமது பூமியைக் காக்கும் நம்முடைய கூட்டுப் பொறுப்பை நினைவூட்டும் விஷயமும் ஆகும். நமது பொறுப்புகளில் எங்கே பின்தங்கியிருக்கிறோம் என்று சிந்திப்பதற்கான நேரமும் இது' என்கிறார்.

2050-ம் ஆண்டளவில், உலக மக்கள்தொகையில் பாதிக்கு மேல், இந்தியா, பாகிஸ்தான், காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய 8 நாடுகளிலேயே அடங்கியிருக்கும் என்றும் ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக மக்கள்தொகை 700 கோடியில் இருந்து 800 கோடி ஆவதற்கு 12 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இதிலிருந்து 900 கோடி தொடுவதற்கு 15 ஆண்டுகள் ஆகுமாம். ஆக 2037-ல்தான் அந்த 'மைல்கல்'லை எட்டுவோம். ஒட்டுமொத்த உலக மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்து வருவதை இது காட்டுகிறது என்கிறார்கள் நிபுணர்கள்.

Tags:    

Similar News