வழிபாடு

விருத்தாம்பிகை அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-07-22 09:55 IST   |   Update On 2023-07-22 09:55:00 IST
  • இன்று ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது.
  • நாளை ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற பாலாம்பிகை, விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோவில் வளாகத்தில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூர திருவிழா 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 13-ந் தேதி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் காலை, இரவு நேரங்களில் வெவ்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலா நடந்து வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலையில் அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அதன்பிறகு சிறப்பு பூஜைகளுடன், மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது 4 கோட்டை வீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் விருத்தாசலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அதைத்தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) ஸ்படிக பல்லக்கு நிகழ்ச்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு, திருமாங்கல்யதாரணம் என்ற ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News