வழிபாடு

மாசி மக திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம். (உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் சந்திரசேகரர்)

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மார்ச் 3-ந்தேதி தேரோட்டம்

Published On 2023-02-17 07:01 GMT   |   Update On 2023-02-17 07:01 GMT
  • மாசிமக திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
  • மார்ச் 8-ந்தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, வேதாரண்யத்தில் நீராடினால் முக்தி என்பது பழமொழி.

வேதாரண்யத்தில் பிரசித்திப்பெற்ற வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. ரிக், யஜூர், சாம, அதர்வணம் ஆகிய வேதங்களால் பூஜிக்கப்பட்ட இந்த கோவிலில், வேதம் செடியாகி, கொடியாகி, மரமாகி வழிபட்டதால் இந்த கோவில் உள்ள பகுதி வேதாரண்யம் என்ற பெயரை பெற்றது. 64 சக்தி பீடங்களில் சுந்தரி பீடமாக உள்ள இந்த கோவிலில் இறைவனாக வேதாரண்யேஸ்வரரும், வேதநாயகி அம்பாளாகவும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் வேதாரண்யத்தில் பார்வதி தேவியுடன் திருமணக்கோலத்தில் சிவபெருமான் அகத்தியருக்கு காட்சி அளித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.

பல்வேறு சிறப்புகளை கொண்ட வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு மாசிமக திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைமுன்னிட்டு பஞ்சமூர்த்திகளுடன் சந்திரசேகரர் கோவில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்தி நாத பண்டாரசன்னதி, கோவில் நிர்வாக அலுவலர் அறிவழகன், ஸ்தலத்தார் கயிலைமணி வேதரத்தினம், கேடிலியப்பன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியான திருக்கதவு அடைக்க, திறக்க பாடும் நிகழ்ச்சி வருகிற 22-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது. அடுத்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம், 8-ந் தேதி தெப்ப திருவிழா நடக்கிறது.

Tags:    

Similar News