வழிபாடு

ஸ்ரீகாளஹஸ்தி வரதராஜ பெருமாள் கோவிலில் திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2022-08-06 04:15 GMT   |   Update On 2022-08-06 04:15 GMT
  • வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.
  • நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர்.

திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவில் வரலட்சுமி விரத பூஜை நடந்தது. கோவில் வளாகத்தில் நடந்த வரலட்சுமி விரத பூஜையில் சுமங்கலி பெண்கள் பங்கேற்று தாயாரை வழிபட்டனர்.

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் மேற்பார்வையில் வரலட்சுமி விரத பூஜைக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. முன்னதாக அம்மனுக்கு அபிஷேகம், வரலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.

விழாவில் பங்கேற்ற பெண் பக்தர்கள் தாங்கள் கொண்டு வந்த பூஜை பொருட்களை வரதராஜபெருமாள் கோவில் வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த மண்டபத்தில் கலசம் வைத்து, சிறப்புப்பூஜைகள் செய்தனர். வேத பண்டிதர்கள் வரலட்சுமி விரத கதையை படிக்க பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசத்துடன் கதையைக் கேட்ட பின் வரலட்சுமியை வழிப்பட்டனர்.

இதையடுத்து நோன்பு கயிறுகளை பெண் பக்தர்கள் ஒருவருக்கொருவர் கட்டிக் கொண்டனர். தங்களின் கணவர்கள் நீண்ட ஆயுளோடும், ஆரோக்கியத்தோடும் வாழ வேண்டும், தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வரம் வேண்டி வரலட்சுமி விரத பூஜையை மேற்கொண்டனர்.

விரத பூஜையில் காலை முதல் மாலை வரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வரலட்சுமி விரத பூஜையில் பங்கேற்று வழிபட்ட பெண் பக்தர்களுக்கு சிவன் கோவில் சார்பில் தாம்பூலம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News