வழிபாடு

கொடியேற்றத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டதை படத்தில் காணலாம்.

உவரி அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2023-01-25 05:29 GMT   |   Update On 2023-01-25 05:29 GMT
  • இந்த விழா பிப். 5-ந்தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.
  • திருவிழா நாட்களில் தினசரி திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து மறையுரையாற்றினார். தொடர்ந்து வருகிற 5-ந்தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி காலை திருயாத்திரை திருப்பலி, மறையுரை, மாலையில் ஜெபமாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

நேற்று இரவு நடந்த கொடியேற்று விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணிபவர் சிங், ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ராதாபுரம் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் லெரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை தோமினிக் அருள்வளன் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

Similar News