வழிபாடு

திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைனில் அபிஷேகம்-சேவா டிக்கெட்

Published On 2022-11-30 08:30 GMT   |   Update On 2022-11-30 08:30 GMT
  • அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.
  • கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

அறுபடைகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள் தோறும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர்.

சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், திருக்கல்யாணம், தங்கத்தேர், கேடயம் உள்ளிட்ட வேண்டுதலை நிறைவேற்ற சேவா கட்டணம் செலுத்துவது வழக்கம்.

அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் கடந்த, 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஆன்லைன் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக மேற்கண்ட அனைத்து அபிஷேகமும் கடந்த ஆண்டு வரை ரத்து செய்யப்பட்டன.

அரசு வழிகாட்டுதலுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் அபிஷேகம், சேவா டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு மலைக்கோவிலில் நேரில் வருபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

இதனால், பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற இருமுறை திருத்தணி மலைக்கோவிலுக்கு வந்து செல்ல வேண்டி இருந்தது.

இந்த நிலையில் திருத்தணி முருகன் கோவிலில் மீண்டும் ஆன்லைன் மூலம் அபிஷேகம் மற்றும் சேவா டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், பக்தர்கள் https://tiruttanigaimurugan, hrce.gov.in என்ற இணையதளம் மூலம் மேற்கண்ட டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுதல்களை பணம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றினால் மலைக்கோவிலில் உள்ள உண்டியல்களில் மட்டும் செலுத்தி வந்தனர்.

தற்போது கோவில் நிர்வாகம் கியூ ஆர்கோடு ஸ்கேன் மூலம் நன்கொடை, காணிக்கைகள் செலுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்காக மலைக்கோவிலில், தேர்வீதியில் நான்கு இடங்களில் கியூஆர் கோடு விளம்பர பலகைகள் வைத்துள்ளனர்.

இனிவரும் நாட்களில் பக்தர்கள் பணமாக இல்லாமல் மொபைல் போன் மூலம் கியூ ஆர்கோடு ஸ்கேன் செய்து காணிக்கைகள். நன்கொடைகள் செலுத்தலாம். இதற்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

இதேபோல் ஆன்லைன் மூலம் தரிசனம் டிக்கெட் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News