வழிபாடு

கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

பிரம்மோற்சவ விழா 4-வது நாள்: கற்பக விருட்ச வாகனத்தில் கோவிந்தராஜசாமி வீதிஉலா

Update: 2023-05-30 06:50 GMT
  • ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • இன்று தங்கக் கருட வாகன வீதிஉலா நடக்கிறது.

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 4-வது நாளான நேற்று காலை 7 மணியில் இருந்து காலை 9 மணிவரை கற்பக விருட்ச வாகனத்தில் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

அமிர்தம் வேண்டி பார்க்கடலை கடைந்தபோது, அதில் இருந்து தோன்றிய மரம் கற்பக விருட்சம். அந்த மரத்தின் கீழ் அமர்ந்து வரம் வேண்டி தியானம் செய்தால், பக்தர்கள் விரும்பும் பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே பக்தர்களுக்கு வேண்டிய வரம் அளிக்க உற்சவர் கோவிந்தராஜசாமி உபயநாச்சியார்களுடன் இணைந்து சிறப்பு அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி உலா வந்தார்.

அதைத்தொடர்ந்து காலை 9.30 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை கோவிந்தராஜசாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 5.30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சர்வ பூபால வாகனத்தில் உற்சவர்கள் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

வீதிஉலாவில் திருமலை மடாதிபதிகள், கங்கணப்பட்டர் ஏ.பி.சீனிவாச தீட்சிதுலு, கோவில் துணை அதிகாரி சாந்தி, உதவி அதிகாரி ரவிக்குமார், கண்காணிப்பாளர் நாராயணா, கோவில் ஆய்வாளர் ராதாகிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரம்மோற்சவ விழாவின் 5-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை கருடசேவை (தங்கக் கருட வாகன வீதிஉலா) நடக்கிறது.

Tags:    

Similar News