வழிபாடு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் தீர்த்தவாரியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்

Published On 2022-11-28 06:47 GMT   |   Update On 2022-11-28 06:47 GMT
  • குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.
  • நாளை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

திருப்பதி திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் கடந்த 19-ந் தேதி அங்குரார்பணமும், 20-ந் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கியது.

இதையடுத்து தினமும் காலை, மாலை என இருவேளையில் பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்தார். நேற்று காலை ரத உற்சவமும், மாலை அம்ச வாகன ஊர்வலம் நடந்தது.

பிரம்மோற்சவ நிறைவு நாளான இன்று சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. இதனை கண்டுகளிக்க தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்சானூரில் குவிந்தனர்.

காலை 7 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 11.20 மணி முதல் 11.50 மணி வரை பஞ்சமி தீர்த்த குளத்தில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது.

முன்னதாக அச்சர்கள் சக்கரத்தாழ்வாருக்கு சிறப்பு பூஜைகள் செய்து கோவிலில் இருந்து தீர்த்தவாரி குளத்திற்கு கொண்டு வந்தனர். குளத்தை சுற்றிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷமிட்டனர்.

குளத்தில் நீராடுவதற்காக அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் தீர்த்தவாரி முடிந்தவுடன் குளத்தில் புனித நீராடினர்.

இதையடுத்து மாலை குதிரை வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இரவு 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கொடி இறக்கம் நடைபெறுகிறது. நாளை மாலை பத்மாவதி தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புஷ்ப யாகம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News