வழிபாடு

சிம்ம வாகனம், முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா வந்த போது எடுத்த படம்.

கார்த்திகை பிரம்மோற்சவம்: முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா

Published On 2022-11-23 06:12 GMT   |   Update On 2022-11-23 06:12 GMT
  • தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது.
  • ஊஞ்சல்சேவை நடைபெற்றது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் மூன்றாவது நாளான நேற்று காலை முத்துப்பந்தல் வாகனத்தில் பத்மாவதி தாயார் பகாசுரவத அலங்காரத்தில் எழுந்தருளி மங்கள வாத்தியங்கள் முழங்க நான்கு மாட வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 8 மணி முதல் 10 மணி வரை நடந்த இந்த வீதி உலாவின் போது பக்தர்கள் ஆரத்தி எடுத்து வழிபட்டனர். வாகன வீதி உலாவின் முன்பு பெண்கள் நடனம், கோலாட்டம் மற்றும் பஜனை நிகழ்த்தியபடி சென்றனர்.

சித்தூர் மாவட்டம் நிம்மனப்பள்ளியை சேர்ந்த வெங்கடரமண பஜனை குழுவினர் கிராமிய பாரம்பரிய பில்லனகுரோவி பஜனைகளை நடத்தினர்கள். இதேபோல் ராஜமுந்திரியை சேர்ந்த சிவகேசவ கோலாட்ட பஜனை மண்டலி கலைஞர்களின் பாரம்பரிய நடனம், திருப்பதியை சேர்ந்த சதானந்த நிலையவாச பஜனை கலைஞர்கள், திருப்பதியை சேர்ந்த வைபவ வெங்கடேஸ்வரா கோலாட்ட குழுவினர்களின் கோலாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மதியம் 12.30 மணி முதல் 2.30 மணி வரை கிருஷ்ணசுவாமி மண்டபத்தில் தாயாருக்கு திருமஞ்சனம் நடந்தது. மஞ்சள், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை ஊஞ்சல்சேவை நடைபெற்றது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை பத்மாவதி தாயார் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

Tags:    

Similar News