வழிபாடு

திருத்தளிநாதர் சாமி கோவிலில் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தெப்ப உற்சவம்

Published On 2022-06-14 05:14 GMT   |   Update On 2022-06-14 05:14 GMT
  • சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ளது சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சாமி கோவில்.
  • அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்திற்கு சிவகாமி அம்பாளுடன் திருத்தளிநாதர் எழுந்தருளினார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சாமி கோவிலில் வைகாசி விசாகத்திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சாமி திருவீதி உலா நடைபெற்றது. இதில் சாமி பூதம், அன்னம், ரிஷபம், சிம்மம், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடந்தது. 5-ம் திருநாளான்று திருத்தளிநாதர் சாமிக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடைபெற்றது.

9-ம் திருநாள் அன்று பெரிய தேரில் சிவகாமி அம்மனும், நடுத்தேரில் பிரியாவிடையுடன் திருத்தளிநாதர் சாமியும், சிறிய தேரில் விநாயகப்பெருமானும் திருத்தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடைபெற்றது. 10-ம் திருநாளில் திருத்தளி தீர்த்தத்தில் தீர்த்தம் வழங்குதல் நடைபெற்றது. தொடர்ந்து தெப்ப உற்சவம் நடந்தது. கோவிலில் இருந்து சாமி தெப்ப மண்டபம் எழுந்தருளினர். பின்னர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் முன்னிலையில் அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்த தெப்பத்திற்கு சிவகாமி அம்பாளுடன் திருத்தளிநாதர் எழுந்தருளினார்.

தொடர்ந்து வாணவேடிக்கை முழங்க தெப்பம் சீதளி குளத்தை 3 முறை வலம் வந்தது. கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக குளத்தில் போதிய தண்ணீர் இல்லாததால் தெப்ப உற்சவம் நடைபெறவில்லை. இந்தநிலையில், கார்காத்த வெள்ளாளர் சமூகம் சார்பில் புதிதாக செய்யப்பட்டு இருந்த தெப்பம் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற்றதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News