வழிபாடு

பறவை காவடி எடுத்து அலகு குத்தி வந்த பக்தர்கள்.

திருப்பரங்குன்றத்தில் திரண்ட பக்தர்கள் பால், பறவை காவடி எடுத்து வழிபாடு

Published On 2023-02-05 06:51 GMT   |   Update On 2023-02-05 06:51 GMT
  • பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு என்ற பெருமை கொண்டது திருப்பரங்குன்றம்.

இங்கு மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, சத்தியகிரீசுவரர், கற்பக விநாயகர், துர்க்கை, பவளக்கனிவாய் பெருமாள் ஆகிய 5 சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். திருப்பரங்குன்றம் மலை சிவலிங்க வடிவில் இருப்பதால் திருவண்ணாமலைக்கு அடுத்தபடியாக பக்தர்கள் இங்கு கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.

இன்று தைப்பூச நட்சத்திரம் மற்றும் தை பவுர்ணமியையொட்டி அதிகாலை முதல் திரளான பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூச நட்சத்திரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் கோவிலில் நேற்று தைப்பூச திருவிழா நடந்த நிலையில், நாள்காட்டியில் இன்று தைப்பூசம் என்று இருப்பதால் பக்தர்கள் பால்காவடி, பறவை காவடி பால்குடம் உள்ளிட்டவைகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பக்தர்கள் எடுத்து வரும் பால்குடங்கள் மூலஸ்தானத்தில் உள்ள வேலுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் நகரை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் கோவில் வாசல், சன்னதி தெரு மற்றும் கிரிவலப் பகுதிகளில் வாகனங்கள் சென்று வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது .

பால்குடம், காவடி, பறவை காவடி எடுத்து வரும் பக்தர்கள் வழக்கமாக சன்னதி தெரு வழியாக கோவில் வாசலை வந்தடைவார்கள். இன்று போலீசாரின் கெடுபிடி காரணமாக பக்தர்கள் கீழரத வீதிகள் வழியாக சுற்றி விடப்பட்டனர். கடும் வெயிலில் பக்தர்கள் கோவிலுக்கு சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டது.

Tags:    

Similar News