வழிபாடு

வடலூர் வள்ளலார் ஞான சபையில் தைப்பூச திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

Published On 2023-02-03 07:25 GMT   |   Update On 2023-02-03 07:25 GMT
  • பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.
  • 7-ந் தேதி வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே மருதூரில் வள்ளலார் அவதரித்தார்.

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன், உணவே மருந்து, மருந்தே உணவு போன்ற போதனைகளை கூறியதோடு அதற்கேற்றார் போல வாழ்ந்து காட்டியவர்.

தீர்க்க முடியாத பல்வேறு நோய்களை இயற்கை வைத்திய முறைகளில் தீர்த்து வைத்தவர். யாரும் பசியால் இறக்க கூடாது என்ற எண்ணத்தில் சன்மார்க்க சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கினார். இதனால் வள்ளலார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார்.

இறைவனுக்கு உருவம் கிடையாது. ஜோதி வடிவானவர் என்று உலகிற்கு பறைசாட்டியவர் வள்ளலார். அதற்கென ஞான சபை அமைத்து ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திர தினத்தன்று ஆன்மீகவாதிகளுக்கு ஜோதி தரிசனம் தருவார்.

அவரை பின்பற்றி மாதந்தோறும் வடலூரில் பார்வதிபுரத்தில் உள்ள ஞானசபையில் பூச நட்சத்திர தினத்தில் 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் நடக்கும்.

தை மாதத்தில் அவர் முக்தியடைந்ததால் தைப்பூச தினத்தன்று 7 திரைகளை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இது மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக வடலூர் சுற்று வட்டார பகுதி மக்களால் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. இந்த தைப்பூச விழாவிற்கு தமிழகம் மற்றும் உலகெங்கிலும் இருக்கும் வள்ளலார் சபையினர் இங்கு வந்து ஜோதி தரிசனம் பார்த்து செல்வர்.

இந்த ஆண்டுக்கான விழா நாளை (4-ந் தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அன்று காலை 5 மணிமுதல் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்படும். காலை 7.30 மணிக்கு மருதூர் வள்ளலார் சன்னதியில் மருதூர் கிராமவாசிகளால் கொடியேற்றப்படும். நற்கருங்குழியில் உள்ள வள்ளலார் சன்னதியில் நற்கருங்குழி கிராமவாச களால் கொடி யேற்றப்படும்.

பார்வதிபுரத்தில் உள்ள வள்ளலார் ஞானசபையில் காலை 10 மணிக்கு தைப்பூச விழாவிற்கான கொடியேற்று விழா நடைபெற வுள்ளது. இக்கொடியினை பார்வதிபுரம் கிராமவாசிகள் ஏற்றிவைத்து விழாவினை தொடங்கிவைக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து திரு அருட்பா கருத்தரங்கம், சன்மார்க்க கருத்தரங்கங்கள் நடக்கவுள்ளது.

5-ந் தேதி தைப்பூச தினத்தன்று காலை 6 மணி, 10 மணி, நண்பகல் 1 மணி இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் அதிகாலை 5.30 மணி என 6 வேளைகளில் 7 திரைகளை நீக்கி ஞானசபையில் ஜோதி தரிசனம் நடக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து 7-ந் தேதி நண்பகல் 12 மணி முதல் மாலை 6 மணிவரை வள்ளலார் முக்தியடைந்த சித்தி வளாகத் திருஅறை தரிசனம் நடைபெறும்.

இதையொட்டி சிறப்பு பஸ் வசதி மற்றும் ரெயில் வசதி செய்யப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்பும் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இதற்காக 1000 போலீ சார் வடலூரில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News