- கருவறையில் திரைச்சீலை தொங்கும் போது வணங்குதல் கூடாது.
- கோவிலுக்குள் யாரையும் தீய வார்த்தைகளால் திட்டக்கூடாது.
மாலறு நேயமும், மலிந்தவர் வேடமும் தான் அரண் எனத்தொழுமே என்கிறது சிவஞான போதம். உண்மை பக்தியுடன் கோவில்களுக்கு சென்று தொழுதால் அறிவும், நல்வாழ்வும் செவ்வனே கிட்டும். நல்லறிவே மகிழ்ச்சியின் அடித்தளம். இதனை தரும் ஆற்றல் ஆலய வழிபாட்டிற்கு மட்டுமே உண்டு.
நாம் வீடுகளில் எவ்வளவோ பூஜைகள் செய்து வழிபட்டாலும், கோவிலுக்கு சென்று வழிபட்டால்தான் குறைவின்றி நிறைவு உண்டாகும். சித்தாந்தம் கூறும் இவ்வளவும் ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்கிறார் அவ்வை பிராட்டியார்.
நினைத்த மாதிரியெல்லாம் கோவிலுக்கு போகலாம் என்று யாரும் நினைக்கக் கூடாது. நிறைய ஐதீக விஷயங்கள் இருக்கின்றன. குளித்து, தூய ஆடை உடுத்தி கோவிலுக்கு செல்ல வேண்டும். தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு போன்ற பூஜைப் பொருள் அல்லது எண்ணெய், திரி அல்லது கற்பூரமாவது கொண்டு செல்ல வேண்டும்.
கோவிலுக்கு நடந்தே செல்ல வேண்டும். கோவிலில் முதலில் ராஜகோபுரத்தை வணங்கி விட்டு பிறகே கோவிலுக்குள் செல்ல வேண்டும். கோவிலுக்குள் நுழைந்ததும் கொடி கம்பத்தை வணங்க வேண்டும். அடுத்ததாக வாகனத்தை வணங்கி உள்ளே சென்று மூலவரை வணங்கி மானசீகமாக பாவிக்க வேண்டும். பிறகு துவார பாலகர்களை வணங்கி விட்டு கருவறைக்கு செல்ல வேண்டும்.
அர்ச்சகர் பூஜை செய்யும் நேரத்தில் மூலவரை வணங்கி பிரசாதம் பெற்றுக் கொள்ள வேண்டும். பின்னர் பிரகாரத்தில் உள்ள மூர்த்திகளை வணங்க வேண்டும். பிரகாரத்தை முறையே 3, 5, 7, 9, 11, 27, 54, 108 ஆகிய எண்ணிக்கையில் சுற்றி வரலாம். வேகமாக நடக்காமல் அமைதியாக கடவுள் சிந்தனையோடு வலம் வரவேண்டும். விக்கிரகத்திற்கு தீபாராதனை செய்யும் போது கண்களை மூடிக்கொண்டு வணங்க கூடாது.
கோவிலில் ஆண்கள் ஆஷ்டாங்கமாகவும், பெண்கள் பஞ்சாங்கமாகவும் விழுந்து வணங்க வேண்டும். கருவறையில் திரைச்சீலை தொங்கும் போது வணங்குதல் கூடாது. கோவிலுக்குள் யாரையும் தீய வார்த்தைகளால் திட்டக்கூடாது. பிறரை துன்புறுத்துவது போல் நடந்து கொள்ளக் கூடாது. கோவில் வழிபாட்டில் அமைதியும் மன ஒருங்கிணைப்பும் அவசியம். கோவிலுக்கு செல்லும் போது கணவன்-மனைவி இருவருமே சேர்ந்து செல்வது தான் நல்ல பலனைத் தரும்.