வழிபாடு

நவக்கிரக அந்தஸ்து பெற்ற சுவர்பானு

Published On 2023-10-03 06:04 GMT   |   Update On 2023-10-03 06:04 GMT
  • தேவர்களின் வரிசையில் போய் நின்றான் சுவர்பானு.
  • அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.

ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்தால், தேவேந்திரன் தன்னுடைய செல்வம் அனைத்தையும் இழந்தான். அந்த செல்வங்கள் அனைத்தும் கடலுக்குள் சென்று மறைந்துவிட்டன. அதேநேரத்தில் அசுரர்களுடனான போரில் தேவர்களின் பக்கம் இழப்பும் அதிகமாக இருந்தது. அந்த இழப்பு ஏற்படாமல் இருக்க அனைவரும் பிரம்மதேவனிடம் முறையிட்டனர். அவர், பாற்கடலை கடைவதன் மூலம் வெளிப்படும் அமிர்தத்தை அருந்துவதால், தேவர்கள் உயிரிழப்பை தவிர்க்கலாம் என்று ஆலோசனை வழங்கினார்.

ஆனால் பாற்கடலை கடைய தேவர்களால் மட்டுமே இயலாது என்பதால், அசுரர்களையும் உடன் சேர்த்துக்கொள்ள முன்வந்தனர். அமிர்தத்தில் அவர்களுக்கும் பங்கு கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. திருப்பாற்கடலைக் கடைவதற்காக மந்தார மலையை மத்தாகவும், வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடலைக் கடைந்தனர். வாசுகிப் பாம்பின் தலைப்பகுதியை அசுரர்களும், வால் பகுதியை தேவர்களும் பிடித்து இழுத்து, திருப்பாற்கடலைக் கடைந்தனர்.

கடலில் இருந்து முதலில் வெளிப்பட்ட விஷத்தை, சிவபெருமான் அருந்தினார். அந்த விஷம் அவரது கழுத்தில் நின்றதால், 'நீலகண்டன்' எனப் பெயர் பெற்றார். பின்னர் கடலில் இருந்து பல பொருட்கள் வெளிப்பட்டன. அவற்றில் தேவேந்திரன் இழந்த செல்வங்களும் அடங்கும்.

அதில் காமதேனு என்ற பசு, உச்சைசிரவஸ் என்ற வெள்ளைக் குதிரை, ஐராவதம் என்ற வெள்ளை யானை மற்றும் கற்பக விருட்சம் ஆகியவற்றை தேவேந்திரன் எடுத்துக்கொண்டான். அகலிகை என்ற அழகான பதுமையை பிரம்மன் தனது வளர்ப்பு மகளாக எடுத்துக்கொண்டார். பின்னாளில் அவளை கவுதம முனிவர் மணம் முடித்தார்.

திருமகள் என்ற லட்சுமி தேவியை, மகாவிஷ்ணு தன் மார்பில் அமர்த்திக் கொண்டார். பாரிஜாதம், கவுஸ்துப மணி, சங்கு, ஜேஷ்டா தேவி, அப்சரஸ்களும் வெளிப்பட்டனர். இறுதியாக அமிர்த கலசத்துடன் வெளிவந்த தன்வந்திரி பகவானிடம் இருந்து, அசுரர்கள் அமிர்த கலசத்தை பறித்துச் சென்றனர்.

அமிர்தத்தை யார் முதலில் அருந்துவது என்பதில் அசுரர்களுக்குள்ளேயே கலவரம் மூண்டது. இதில் அமிர்தம் யாருக்கும் கிடைக்காமல் வீணாகிவிடும் நிலை உருவானது. இதனால் தேவர்கள் பெரும் கவலை அடைந்தனர். அவர்கள் மகாவிஷ்ணுவிடம் சென்று, அமிர்தத்தை காத்து அருளும்படி வேண்டினர்.

தேவர்களின் வேண்டுதலை ஏற்றுக்கொண்ட விஷ்ணு, மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களிடம் சென்றார். மோகினி உருவத்தில் இருந்த மகாவிஷ்ணு, 'நான் அமிர்தத்தை தேவர்களுக்கும் உங்களுக்கும் சரிபாதியாக பங்கிட்டு தருகிறேன்' என்று அசுரர்களிடம் கூறினார். மோகினியின் அழகில் மயங்கிய அசுரர்கள் அமிர்த கலசத்தை அவளிடம் கொடுத்தனர். அமிர்த கலசத்தை வாங்கிய மோகினி, தேவர்களையும் அசுரர்களையும் இரு வரிசைகளாக நிற்கச் சொன்னாள்.

பின்னர், "முதலில் எந்த வரிசைக்குக் கொடுக்கட்டும். இல்லை ஒருவர் மாற்றி ஒருவராக தரட்டுமா?" என்றாள். அசுரர்கள் 'அமிர்த கலசத்தின் அடிப்பாகத்தில் உள்ள அமிர்தத்தை தங்களுக்கும், தெளிந்த மேல் பகுதியில் இருப்பதை தேவர்களுக்கும் அளிக்கலாம்' என்றனர். அதன்படி தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கத் தொடங்கினாள் மோகினி. அளவுக்கு அதிகமாகவே தேவர்களுக்கு வழங்கப்பட்டது.

மோகினியின் சூழ்ச்சியை உணர்ந்த சுவர்பானு என்ற அசுரன், தேவர்களை போல உருவத்தை மாற்றிக்கொண்டு, தேவர்களின் வரிசையில் போய் நின்றான். இதனை கவனிக்காத மோகினி, சுவர்பானுவுக்கும் அமிர்தத்தை வழங்கினாள்.

அமிர்தம் கிடைத்தவுடன் அதை உடனடியாக பருகிவிட்டான். தான் அமிர்தம் உண்டதை யாரும் அறியவில்லை என்று சுவர்பானு கருதிய நேரத்தில், அவனை சூரியனும், சந்திரனும் இனம் கண்டு கொண்டனர். உடனடியாக அது பற்றி மோகினிக்கு உணர்த்தினர். மோகனி, அமிர்தம் வழங்குவதற்காக தன் கையில் இருந்த அகப்பையைக் கொண்டு சுவர்பானுவின் தலையை துண்டித்தாள்.

உடலும், தலையும் தனித்தனியாக ஆனாலும், அமிர்தம் அருந்தியதன் விளைவாக சுவர்பானு இறக்கவில்லை. இதற்கிடையில் அசுரர்கள் ஏமாற்ற நினைத்ததாகக் கூறி, அவர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என்று மோகினி தெரிவித்து விட்டாள். இதனால் கோபம் கொண்ட அசுரர்கள், சுவர்பானுவை தங்களோடு சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டனர்.

உடல் வேறு, தலை வேறாக பிரிந்தாலும், அமிர்தம் உண்ட காரணத்தால் சுவர்பானுவின் துண்டான தலைக்கு பாம்பின் உடலும், உடலுக்கு 5 பாம்பின் தலையும் முளைத்தன. இந்த மாறுபட்ட உடல் அமைப்பைக் கொண்ட அவனை, தேவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த சுவர்பானு, பிரம்மதேவரை தஞ்சம் அடைந்தான். தனக்கு பழைய உடல் உருவைத் தரும்படி பிரம்மனிடம் வேண்டினான். பிரம்மதேவரோ, "நாராயணரால் தண்டிக்கப்பட்ட உன்னை, பழைய நிலைக்கு மாற்றுவது என்பது இயலாது. எனவே இருவேறு உடல் பிரிவுகளைக் கொண்டவனாக இருப்பாய்.

மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட உடல் அமைப்பிற்கு 'ராகு' என்றும், மனித உடலும், பாம்பின் தலையும் கொண்ட அமைப்புக்கு 'கேது' என்றும் பெயர் அமையும்" என்றார்.

அப்போது பிரம்மனிடம் சுவர்பானு மீண்டும் ஒரு கோரிக்கையை வைத்தான். "சூரியனும் சந்திரனும் காட்டிக் கொடுத்ததால் தான் எனக்கு இந்த நிலை ஏற்பட்டது. எனவே அவர்களைப் பழி வாங்குவதற்கு அருள்புரிய வேண்டும்" என்றான். அதற்கு பிரம்மன், "பின்னாளில் நீங்கள் நவக்கிரக அமைப்புடன் சேரும்போது, சூரியன் மற்றும் சந்திரன் ஒளிகளை மறைத்து, அவர்களுக்கு கிரகண தோஷத்தை ஏற்படுத்துவீர்கள். மேலும் நீங்கள் இருவரும் மற்ற கிரகங்களைப் போல் முன்னோக்கிச் செல்லாமல், பின்னோக்கி சஞ்சாரம் செய்வீர்கள்" என்று அருள்புரிந்தார்.

பூமியில் பூண்டாக மாறிய அமிர்தம்

காசியப முனிவரின் மகன் விப்ரசித்தி. இவருக்கும் சிம்மிகை என்ற அசுர குல பெண்ணுக்கும் பிறந்தவர்தான், சுவர்பானு. பின்னாளில் இவர் ராகு-கேதுவாக மாறினார். மோகினி வழங்கிய அமிர்தத்தை, தேவர்களைப் போல உருமாறி வாங்கி பருகியதற்காக மோகினி, சுவர்பானுவின் தலையை துண்டித்தபோது, அவன் வாய்க்குள் இருந்த சில துளி அமிர்தம், பூமியில் விழுந்தது. அந்த அமிர்தத்தில் இருந்து தோன்றியதுதான் பூண்டு என்று புராணங்கள் சொல்கின்றன.

அமிர்தத்தில் இருந்து உருவானதால், பூண்டுவுக்கு மருத்துவ குணம் அதிகமாக இருக்கிறது. அதே நேரம் இந்த பூண்டு தெய்வீக காரியங்களில் இருந்து விலக்கிவைக்கப்பட்டது. அமிர்தத்தில் இருந்து தோன்றிய பொருளாக இருந்தாலும் கூட, அது அசுர குலத்தைச் சேர்ந்த ஒருவரின் எச்சிலாக வெளிப்பட்டதில் முளைத்தது என்பதால், அதில் ராட்சச குணம் இருக்கும் என்ற ரீதியில் ஆன்மிகத்தில் இருந்து பூண்டு விலக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News