வழிபாடு

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆவணி திருவிழா தேரோட்டம்

Published On 2022-09-11 08:31 GMT   |   Update On 2022-09-11 08:31 GMT
  • இன்று ஆராட்டு விழா நடக்கிறது.
  • பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை, ஆவணி, மார்கழி, மாசி ஆகிய மாதங்களில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறும். இதில் சித்திரை, மார்கழி, மாசி ஆகிய மாத திருவிழாக்கள் தாணுமாலயசாமிக்கும், ஆவணி மாத திருவிழா திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சாமிக்கும் நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான ஆவணி திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளையில் வாகன பவனி நடைபெற்று வந்தது.

9-ம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி மாலை 5.45 மணியளவில் கோவிலில் இருந்து தட்டு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரை இந்திரன் தேராகிய சப்பரத்தேரில் அமரச் செய்தனர். பின்னர் தேரை பக்தர்கள் 4 ரத வீதிகளில் இழுத்து வந்தனர்.

இந்திரன் தேராகிய சப்பர தேர் மிகவும் பழுதாகி காணப்பட்டதால் அதை சீரமைக்க பக்தர்கள் கோவில் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இதையடுத்து ரூ.5 லட்சம் செலவில் இந்திரன் தேர் புதுப்பிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேரோட்ட விழா நிகழ்ச்சியில் முன்னாள் கண்காணிப்பாளர் சோனாசலம், தேவசம் பொறியாளர் ராஜ்குமார், கோவில் மேலாளர் ஆறுமுகதரன், கணக்கர் கண்ணன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நான்கு ரத வீதிகளில் சுற்றி வந்த தேர் மாலை 6.25 மணியளவில் நிலைக்கு வந்து நின்றது. தொடர்ந்து சாமிக்கு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

10-ம் திருவிழாவான இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆராட்டு விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் தலைமையில் கோவில் பணியாளர்களும், பக்தர்களும் இணைந்து செய்திருந்தனர்.

Tags:    

Similar News