ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தாயார் வசந்த உற்சவம் தொடங்கியது
- உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
- வசந்த உற்சவ நாட்களில் தாயார் மூலவர் சேவை கிடையாது.
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கோடை காலத்தில் தாயார் வசந்த உற்சவம் நடைபெறும். வசந்த உற்சவத்தின் போது தாயார் சன்னதியின் பின்புறம் அகழி போல் உள்ள பள்ளத்தில் நீர் நிரப்பி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய மண்டபத்தின் நடுவில் ரெங்கநாச்சியார் வீற்றிருப்பார்.
இந்த ஆண்டுக்கான தாயார் வசந்த உற்சவம் நேற்று தொடங்கியது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபம் வந்து சேர்ந்தார். அங்கு அலங்காரம், அமுது கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். உற்சவர் ரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
பின்னர் ரெங்கநாச்சியார் வசந்த மண்டபத்திலிருந்து இரவு 8.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார். இந்த விழா வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு வசந்த மண்டபத்திற்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைவார்.
வசந்த உற்சவ நாட்களில் மாலை 4 மணிமுதல் மாலை 6 மணி வரை தாயார் மூலவர் சேவை கிடையாது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.