வழிபாடு

ஆன்மிக அற்புதங்கள்

Published On 2025-03-02 08:17 IST   |   Update On 2025-03-02 08:17:00 IST
  • வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர்.
  • தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன.

* நாகை மாவட்டத்தில் பூந்தோட்டத்திற்கு அருகே உள்ள ஊர் திலதர்ப்பணபுரி. இந்த ஊர் சிதலைப்பதி, செதில்பதி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இங்கு முக்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. ஆலயத்திற்கு வெளியே சந்திர தீர்த்தம் உள்ளது. இங்கு அரிசிலாறு பாய்கிறது. ராமரும் லட்சுமணரும் தம் தந்தை தசரதருக்கு தர்ப்பணம் செய்த இடம் இது என்கிறது தலபுராணம்.

* சீதை இலங்கையில் அசோக வனத்தில் வாடிக் கொண்டிருந்தபோது அவளை மீட்டு வர வேண்டுமே எனக் கவலைப்பட்டார் ராமர். இடையில் உள்ள கடலை எப்படிக் கடப்பது என்று விபீஷணரிடம் ஆலோசனை கேட்டார். அவரது ஆலோசனைப்படி தர்ப்பப் புல்லைப் பரப்பி, அதன்மீது படுத்த நிலையில் வருணபகவானை நோக்கி ஏழு நாட்கள் தவம் இருந்தார் ராமர். ராமபிரான் தவமிருந்த இத்தலமே தர்ப்பசயனம் எனும் திருத்தலமாகும்.


* கைகேயியின் சூழ்ச்சியால் ராமன் காட்டிற்குச் சென்றான். அரசுரிமையை இழந்தான். வனவாசத்தின்போது சீதையையும் பிரிந்தான். ராமன் சந்தித்த சோதனைகள் ஏராளம். இதனால் ராமனுக்கு மனச்சோர்வு ஏற்பட்டது. பின்னர் மனச்சோர்வும் கலக்கமும் நீங்கி இலங்கை செல்ல பாலம் கட்டி, ராவணனுடன் போரிட்டு வெற்றி வாகை சூடினான். இதற்குக் காரணம் ராமபிரான் அம்பிகையை வேண்டி கடைப்பிடித்த நவராத்திரி விரதத்தின் பலன்தான் என்கிறார் சூத மகரிஷி.

* ஸ்ரீராமநவமியன்று பக்தர்கள் தம் சக்திக்குத் தகுந்தபடி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை யாரேனும் ஒருவருக்கு தானமாகத் தருவது நல்லது. ஸ்ரீராமர் வழிபாடும், வரலாறும், பெருமைகளும் எங்கும் பரவவேண்டும் என்பது இவ்வகை தானத்தின் நோக்கம். சிலர் விசிறிகளை தானமாகத் தருகின்றனர். ஸ்ரீராமருக்கு எல்லோரும், எப்போதும் அடிமைத் தொழில் புரியவேண்டும் என்பதை எடுத்துக் காட்டுகின்ற ஓர் அடையாளம் விசிறி. அஷ்ட மங்கலப் பொருள்களில் விசிறியும் ஒன்று. ஸ்ரீராமரை வழிபட்டால் எங்கும் மங்கலம் பொங்கித் தங்கும் என்பதை விசிறி புலப்படுத்துகிறது.

* மதுரை மீனாட்சி கோவில், கூடலழகர் கோவில், திருவாதவூர்க் கோவில்களில் இசைத்தூண்கள் உள்ளன. தாராசுரத்தில் சங்கீதப் படிக்கட்டுகள் உள்ளன. மதுரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஒரே தூணில் 22 சங்கீதத் தண்டுகள் உள்ளன. அவைகளில் ஒன்று சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் கும்பேசுவரர் மங்களாம்பிகா சன்னிதியில் உள்ள தூண்களில் கற்களாலான சங்கிலி உள்ளன. சிம்மத்தின் வாயில் உள்ள ஒரு கல்பந்து சுழலும் வகையில் அமைந்துள்ளது. இது போன்ற அற்புதங்களை வடித்த சிற்பிகளின் கைவண்ணம் பிரமிக்க வைப்பவை.

* நாகப்பட்டினம் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள திருத்தலம், தில்லை விளாகம். இங்கு பஞ்சலோகத்திலான ஸ்ரீகோதண்ட ராமர், சீதாபிராட்டியார், இலக்குவன், அனுமன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் அற்புதமாக காட்சி தருகிறார். இந்த விக்கிரகங்களின் கையிலும், காலிலும் உள்ள பச்சை நிற நரம்புகள், விரலில் உள்ள ரேகைகள், கை, கால்களில் உள்ள நகங்கள் மற்றும் அனுமனின் திருமேனியில் மண்டிக் கிடக்கும் உரோமங்கள், தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. மேலும் ஸ்ரீராமர் கானகம் செல்லும் போது அவருடைய அன்னை கோசலை இடது மணிக்கட்டில் கட்டிய ரட்சா பந்தன், இடது முட்டியின் கீழே கட்டப்பட்டுள்ள ரட்சை, எழுத்துக்களுடன் கூடிய தனுசு போன்றவையும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

* சீதா-ராம கல்யாணம் முடிந்து அயோத்தி வந்த ராமரை எல்லோரும் வாழ்த்தி விலை உயர்ந்த பரிசுகளை அளித்தனர். அப்போது மித்ரபந்து என்ற செருப்புத் தைக்கும் தொழிலாளி அழகிய பாதுகைகளை மிகவும் சிரத்தையுடன் செய்து கொண்டு வந்தான். பின்னர், உயரிய பரிசுகளை பலர் தரும் போது நாம் அற்ப பாதுகைகளையா தருவது என வருந்தி பின் வாங்கினான். இதைக் கவனித்த ராமர், "உண்மையான உழைப்பில் உதித்த உன் பரிசுதான் உயர்ந்தது'' எனக் கூறி பாதுகைகளை ஏற்றுக்கொள்ள, மித்ரபந்து மகிழ்ந்து போனான்.

ராமர் காட்டுக்குப் புறப்பட்ட போது, "வனவாசம் போகும் போது எதையும் உடன் எடுத்துப் போகக் கூடாது தான். இருந்தாலும் இந்தப் பாதுகைகளை அணிந்து செல்கிறேன்'' என்று கைகேயியிடம் கூறிவிட்டு, கண்ணீருடன் நின்ற மித்ரபந்துவை பார்த்து, "விலை உயர்ந்த பரிசுகள் எனக்குப் பயன்படவில்லை. உன்னுடைய பாதுகைகள்தான் கல்லும், முள்ளும் குத்தாமல் காக்கப் போகிறது'' என்றார். அந்தப் பாதுகைகள்தான் 14 வருஷம் அயோத்தியையும் ஆண்டது.

Tags:    

Similar News