வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்களை எடுத்துச்சென்ற பக்தர்கள்

Published On 2023-04-03 04:14 GMT   |   Update On 2023-04-03 04:14 GMT
  • வழியெங்கும் கிராமங்களில் அம்மனுக்கு ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.
  • பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த மாதம் 12-ந் தேதி பூச்சொரிதல் விழா தொடங்கியது. அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டாவது மற்றும் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் மண்ணச்சநல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்கள், திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் டிராக்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம், சிலையை வைத்து தட்டு மற்றும் கூடைகளில் பூக்களை எடுத்து ஊர்வலமாக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்று, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர்.

மேலும் பாதயாத்திரையாகவும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர். இதில் துறையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை சார்பில் மேலாளர் தண்டபாணி மற்றும் அனைத்து ஊழியர்களும் ஒன்றிணைந்து நேற்று இரவு துறையூரில் இருந்து டிராக்டரில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படம் மற்றும் பூக்களுடன் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்றனர். வழியெங்கும் கிராமங்களில் அம்மனுக்கு ஆராதனை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.

உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரில் இருந்தும் பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பூக்களை கொண்டு சென்று, அம்மனுக்கு சாற்றி வழிபட்டனர். சமயபுரத்தில் பக்தர்களின் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News